சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாகவும், இன்னும் சிங்கப்பெண் அதிரடி படை திட்டத்தை தொடங்கி வைக்காமல் இருப்பதற்காகவும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின்னரும் கூட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கோவை சிறுமி விவகாரம், விழுப்புரம் சிறுமி விவகாரம் தவெக ஆட்சி மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதனிடையே பெண்கள் பாதுகாப்புக்கான பிரத்யேக திட்டம் என்று முதல்வர் விஜய்யால் சொல்லப்பட்ட சிங்கப்பெண் திட்டம் இதுவரை தொடங்கி வைக்கப்படவில்லை. முதல்வராக பதவியேற்ற பின் விஜய் கையெழுத்திட்ட முதல் திட்டங்களில் சிங்கப்பெண் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்திற்கான தொடக்க விழா 2வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்கான காரணத்தையும் தமிழக அரசு விளக்கமாக கூறவில்லை. இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னை கோடம்பாக்கம் அருகே 16 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த தலைமைக் காவலர் கைது - குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீரானதாக இருக்கும்?
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 16 வயது சிறுவனின் வாயில் மதுவை ஊற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தலைமைக் காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையில் பணியாற்றும் காவலரே இத்தகைய மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களும், அதிகாரிகளுக்கு அவர் போடும் உத்தரவுகளும் துளியளவும் செயல்பாட்டிற்கு வருவதில்லை என்பதை அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications