புழல் சிறையில் பிரபல தாதா நாகேந்திரனின் இளைய மகன்.. வழக்கறிஞர் செய்த செயலால் ஆடிப்போன போலீஸ்
சென்னை: சென்னையின் பிரபல தாதாவான நாகேந்திரனின் இளைய மகன் அஜித்ராஜ் கொடுங்கையூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டுள்ளது. அஜித்ராஜ்க்கு வழக்கறிஞர் சப்ளை செய்ய முயன்ற செல்போன் பேட்டரி சிக்கி உள்ளது. செல்போன் பேட்டரி சப்ளை செய்ய முயன்ற வழக்கறிஞரிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக சென்னை புழல் மத்திய சிறைச்சாலை இருக்கிறது. 212 ஏக்கர் பரப்பளவில், ₹ 77.09 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலை தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையாகும். இங்கு மொத்தமாக 3,000 முதல் 4,200 கைதிகளை அடைத்து வைக்கும் வசதிகள் இருக்கிறது. ஆனால் சிறையில் அதைவிட மிகஅதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புழல் சிறை எப்படி
புழல் சிறை வளாகம் மூன்று பிரதான கட்டிட வளாகங்களைக் கொண்டு இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. புழல் மத்திய சிறைச்சாலை I தண்டனைக் கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். புழல் மத்திய சிறைச்சாலை IIல் விசாரணைக் கைதிகள் மட்டும் அடைக்கப்பட்டு உள்ளார்கள். புழலில் சிறப்பு மகளிர் சிறைச்சாலையும் உள்ளது. இங்கு பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
புழல் சிறையில் சிறை நீதிமன்றம்
புழல் சிறை கைதிகளுக்காக வளாகத்திற்குள்ளேயே சிறை நீதிமன்றம் செயல்படுகிறது. இதில் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் நீதிபதிகள் வந்து வழக்குகளை விசாரித்து வருகிறார்கள். இதுதவிர சிறைக்குள்ளேயே மருத்துவப் பரிசோதனைக்கான இடம் மற்றும் மருத்துவ வசதிகள், நூலகம், தியான மண்டபம், உடற்பயிற்சிக் கூடம் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இங்கு பார்வையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கைதிகளைச் சந்திப்பதற்கான நெரிசலைக் குறைக்கும் வகையில், முன்பதிவு மற்றும் குறிப்பிட்ட நேர அட்டவணைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சிறையில் கைதிகள் வழக்கறிஞர்கள் சந்திப்பு
அதன்படியே கைதிகளை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கிறார்கள். சிறையில் முறைகேடுகளை தவிர்க்கவும், கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் மற்றும் ஆபத்தான பொருட்கள் கடத்துவதை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் சில நேரங்களில் கைதிகளுக்காக கடத்தலில் ஈடுபட்டு சிலர் சிக்கி கொள்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.
தாதா நாகேந்திரன் இளைய மகன்
சென்னையின் பிரபல தாதாவான நாகேந்திரனின் இளைய மகன் அஜித்ராஜ் கொடுங்கையூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டிருக்கிறது. புழல் மத்திய சிறையில் வழக்கறிஞர்கள் கைதிகள் நேர்காணல் அறையில் அஜித்ராஜை சந்திப்பதற்காக ராஜி என்ற வழக்கறிஞர் வந்துள்ளார். அப்போது தடுப்புகளை தாண்டி கைதி அஜித் ராஜிக்கு வழக்கறிஞர் செல்போன் பேட்டரியை வீசி சப்ளை செய்ய முயன்றுள்ளார்.
வழக்கறிஞர் கைது
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறை காவலர்கள் இதனைக் கண்டு செல்போன் பேட்டரியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைதிக்கு செல்போன் பேட்டரி சப்ளை செய்ய முயன்ற வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் உயிரிழந்த பிரபல தாதா நாகேந்திரனின் சடலத்தின் முன்பாக பரோலில் வந்த அவரது இளைய மகன் அஜித்ராஜ் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications