சென்னையில் இளம் வக்கீல் வெட்டிக்கொலை.. டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்கள் கைது! பரபர
சென்னை: சென்னையில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (24), சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கௌதம் நேற்று முன்தினம் இரவு திருவான்மியூர் திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், கௌதமை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த கௌதமை மீட்டு, அடையார் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌதம், சில மணி நேரத்திற்குள்ளாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவான்மியூர் காவல் துறையினர், கௌதமின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, கௌதமை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஐந்து நபர்களை, தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். இந்த கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், முதலுதவி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌதம் உயிரிழந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் கௌதமின் உறவினர்களிடம் சிகிச்சை கட்டணத் தொகை 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் தான் உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கௌதமனின் உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றும் சக வழக்கறிஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி 30 ஆயிரம் ரூபாய் செலுத்திய பின்பு கௌதமின் உடல் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வழக்கறிஞர் கௌதம், ரௌடி கும்பலால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து காவல்துறை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை இன்று புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications