ராகுலின் தோல்வி.. இது தமிழிசை.. காங்கிரஸுக்கு உத்வேகம்.. இப்படிக்கு திருநாவுக்கரசர்!
சென்னை: பிரியங்கா காந்தியின் வருகை காங்கிரசுக்கு புதிய உத்வேகம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். அதேசமயம், ராகுலின் தோல்வியே பிரியங்காவின் அரசியல் என்ட்ரி என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை தெரிவித்துள்ளார். அகில இந்திய அளவில் கூட்டணியில் மாற்றம் வரும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ரங்கராஜனின் கூற்றாகும்.
இன்னும் சில மாதங்களில் இந்தியா மிகப்பெரிய தேர்தலை சந்திக்கவேண்டியுள்ள சூழலில் இருபெரும் தேசிய கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் தங்களுக்கான தேர்தல் யுக்திகளை வகுப்பதில் பெரு உழைப்பை செலுத்தி வருகின்றன. அந்த வகையில் உ பி மாநிலத்தில் கிழக்குப் பிராந்தியத்தில் இப்போது ராகுலின் தங்கை பிரியங்காவுக்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு களம் இறக்கப்பட்டுள்ளார். 2004-ம் ஆண்டிலிருந்தே ராகுல் இங்கு அரசியல் செய்து வருகிறார். என்றலும் அவரால் இங்கு பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் பிரியங்காவின் வருகை இங்கு எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி இப்போதைய பிரதான கேள்வியாக எழுகிறது. இது குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர்:
கேள்வி: உ பி யில் அகிலேஷ், மாயாவதி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் இல்லை என்பதால்தான் பிரியங்கா அரசியலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளாரா?
பதில் : பிரியங்கா அரசியலுக்கு வரவேண்டும் என்று நீண்ட காலமாக காங்கிரஸ் தொண்டர்களும், பொது மக்களும் எதிர்பார்த்திருந்த சூழலில் தற்போது அவர் அவர் தீவிர அரசியலுக்கு வந்துள்ளார். ஏற்கனவே அவர் தொகுதி பொறுப்பாளராக பணியாற்றியவர், பல பிரச்சாரங்களை செய்தவர் அரசியல் அவருக்கு புதிதல்ல. ஆகவே இந்த சூழலில்தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என்பது தவறு. அவரது வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். தலைவர் ராகுலுக்கு உதவியாக இருப்பார். அவருடைய அரசியல் வருகையை தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கிறது.

கேள்வி : நடந்து முடிந்த 5 மாநில தேர்தலுக்கு முன்பு வரை ராகுலின் வியுகங்கள் வெற்றி பெறவில்லை என்பதால்தான் பிரியங்கா அரசியலுக்கு வந்துள்ளாரா?
பதில்: தோல்வியைப் பற்றி மட்டுமே கேட்கிறீர்கள் அதற்கு முன்பு பெற்ற வெற்றியைப் பற்றி கேட்கமாட்டீர்களா? கர்நாடகாவில் வெற்றி பெறவில்லையா
கேள்வி: தேர்தலுக்கு பிந்தைய சூழலில் அவருக்கு இந்திய அளவில் பொறுப்பு வழங்கப்படுமா?
பதில்: அதை தலைவர் ராகுல்தான் முடிவு செய்வார்
கேள்வி: தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் அழைக்கப்படுவாரா?
பதில்: நிச்சயமாக அவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரை அழைப்போம்.
பிரியங்காவின் வருகை குறித்து பாஜக மாநிலத்தலைவர் தமிழிசையிடம் கேட்டபோது..
கேள்வி: பிரியங்காவின் வருகை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அந்த கட்சியில் ஒரு சாதாரண நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்தான். அப்போதே அந்தப் பிரச்சாரங்கள் அங்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஸ்டாலின் ராகுலை பெரிய தலைவராக எண்ணி பிரதமராக வரவேண்டும் என்று அறிவித்தார் ஆனால் இப்போது உ பி யில் பிரியங்காவை கொண்டுவந்திருப்பது ராகுலின் தோல்வியை காண்பிக்கிறது. இப்போதுதான் ஒரு சாமானியனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் ஒரு குடும்பத்தின் வாரிசையே கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த வாரிசு அரசியலை அவர்கள் கட்சி வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் நாடு ஏற்றுக் கொள்ளாது.

கேள்வி : பிரியங்காவின் வருகை பாஜகவுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ ?
பதில் : நிச்சயமாக இல்லை. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெரும்பலத்தோடு இருக்கிறோம். மாயாவதியும், அகிலேஷும் ஒன்றிணைந்திருப்பது பாஜகவுக்கு சாதகமான விஷயம். இதனால் காங்கிரஸ்தான் பயந்துபோய் பிரியங்காவை கொண்டுவந்துள்ளார்கள்.
கேள்வி : தலித் வாக்குகளை மாயாவதியும், முஸ்லிம் வாக்குகளை அகிலேஷும் வாங்கும்போது உயர் சாதிப் பிரிவினரின் வாக்குகளை பிரியங்கா பிரிப்பது பாஜகவுக்கு பலவீனம்தானே ?
பதில்: சாதி அடிப்டையில் வாக்குகளை வாங்க பாஜக எண்ணாது, சாதனைகள் அடிப்படையில்தான் பாஜக வெல்லும் என்றார் தமிழிசை.
இவர்கள் இருவரின் பதிலாக இப்படி இருக்க மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கராஜனின் பார்வை வேறமாதிரி இருக்கின்றது. இது குறித்து நம்மிடம் பேசிய அவர் பிரியங்காவின் வருகை பாஜகவுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் ஏனெனில் பிரியங்கா ஒரு புதிய முகமாக களமாடும்போது வாக்காளர்களுக்கு புதிய எழுச்சியை கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது அதே வேளையில் வாக்குகளை பிரிக்கும் பார்வையில் பார்க்கும்போது நிச்சயமாக மாயாவதியும் அகிலேஷும் தங்களது கூட்டணி குறித்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றார்.
பொறுத்திருந்து பார்ப்போம்.. போர் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.. யாரெல்லாம் வீழப் போகிறார்கள்.. யாரெல்லாம் முடி சூடப் போகிறார்கள் என்பதை.












Click it and Unblock the Notifications