லீஸ் பத்திரம்.. வாடகையும் தரல.. கோயில் வாசல்ல போர்டு வைங்க.. திமுகவை விடாமல் குடையும் இந்து முன்னணி
சென்னை: தமிழக அரசும், காவல்துறையும் கோயில் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று விடாமல் வலியுறுத்தி கொண்டிருக்கும் இந்து முன்னணி, தற்போது இன்னொரு கோரிக்கையை திமுக அரசுக்கு விடுத்திருக்கிறது. அது என்ன?
இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு தொடர்ந்து விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

நிலங்கள்: அதாவது, கடந்த சுமார் 75 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிட அரசியல்வாதிகளால் பத்தாயிரம் கோயில்களும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் அழிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போனதாக இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது என்று இந்து முன்னணி பகிரங்கமாக புகார் கூறிவருகிறது.
ஒருபுறம் இந்து கோயில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாவதாகவும், மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போவதாகவும் கூறிவரும் இந்து முன்னணி, தமிழக கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தையும் தமிழகமெங்கும் நடத்தியிருந்தது.
குத்தகை: இந்நிலையில், கோயில் இடங்களில் குத்தகை, வாடகை தராமல் ஆக்கிரமித்துள்ளவர்கள் பட்டியல் ஒவ்வொரு கோயில் வாசலிலும் பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று புதிய கோரிக்கை ஒன்றை இந்து முன்னணி விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமைச்சர்கள் ஆய்வு: "சென்னை அயனாவரம் அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் இடத்தில், கொளத்தூர் மீன் சந்தை கட்டுவது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளனர். கோயில் இடத்தை அரசின் திட்டங்களுக்குப் பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, பக்தர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளார்கள். ஆனால், நீதிமன்றம் வணிக நோக்கத்தை மட்டுமே கவனத்தில்கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு வழிகளில் கோயில் சொத்துகளை திட்டமிட்டு அழித்து வருகிறது. கோயில் சொத்துகளை ஆன்மிகப் பணிக்காகவும், பக்தர்கள் வசதிக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அடுத்த கோரிக்கை: கோயில் இடங்களில் குத்தகை, வாடகை தராமல் ஆக்கிரமித்துள்ளவர்கள் பட்டியல் ஒவ்வொரு கோயில் வாசலிலும் பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறையை இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications