4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி
சென்னை: லீமா ரோஸ் 4300 கோடி சொத்து, லால்குடி தேர்தல், அதிமுக நிதி விவகாரம், எடப்பாடி பழனிசாமி - இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.. பெரும் சொத்து மதிப்புள்ள வேட்பாளர் எடுத்துள்ள திடீர் நிலைப்பாடு கட்சிக்குள் கேள்விகளை எழுப்பியுள்ளது.. லால்குடி தொகுதி தற்போது அரசியல் கவனத்தின் மையமாக மாறியுள்ளது.. இந்த மாற்றம் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. இதன் பின்னணி குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.!!.
திருச்சி மாவட்டத்தின் முக்கிய தொகுதியான லால்குடியில் தற்போது அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மற்றும் அக்கட்சியின் தலைமைக்கு இடையே நிலவுவதாகக் கூறப்படும் புகைச்சல்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..

திருச்சி லால்குடி
ஒரு கட்சியின் தலைமைக்கும் வேட்பாளருக்கும் இடையிலான உறவு என்பது பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், லால்குடியில் அந்த நம்பிக்கை தற்போது ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது
லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்த வேகம் மற்றும் அவருக்கு உடனடியாகக் கிடைத்த அங்கீகாரம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுவாக, ஒரு கட்சியில் இணைந்த உடனேயே ஒருவருக்கு அவர் விரும்பும் தொகுதியை ஒதுக்குவது என்பது அரசியலில் அரிதான விஷயம்.
லீமா ரோஸ் முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியைத்தான் குறிவைத்தார். ஆனால், அங்கு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் தனது கவனத்தை திருச்சி லால்குடி பக்கம் திருப்பினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பெரிய தயக்கமின்றி அவருக்கு பச்சை சிக்னல் காட்டினார்.
லீமா ரோஸ் அதிமுக வேட்பாளர்
இந்தத் தாராள மனப்பான்மைக்குப் பின்னணியில் ஒரு பலமான வாக்குறுதி இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. அதாவது, தேர்தல் நேரத்தில் சுமார் பத்து தொகுதிகளுக்கான செலவுகளைத் தானே ஏற்றுக்கொள்வதாக லீமா ரோஸ் தலைமைக்கு உறுதி அளித்தாராம். இதைக் கணக்கில் கொண்டே, அவர் கேட்ட தொகுதியைத் தலைமை ஒதுக்கியதாகக் கருதப்படுகிறது. ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
சீட் உறுதியான பிறகு, நிதி விவகாரத்தில் லீமா ரோஸ் காட்டும் தயக்கம் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணப் பரிமாற்றத்தில் சிக்கல்கள் இருப்பதாகவும், தேர்தல் முடிந்த பிறகே செலவு செய்த தொகையைத் தர முடியும் என்றும் அவர் தரப்பிலிருந்து வரும் பதில்கள் தலைமையைத் திகைக்க வைத்துள்ளன.
10 தொகுதிகளுக்கு வேண்டாம், குறைந்தபட்சம் திருச்சியில் உள்ள தொகுதிகளுக்காவது நிதி அளிக்கலாமே என்ற கோரிக்கையையும் அவர் நிராகரித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து பணத்தைக் கொண்டு வர முடியவில்லை என்ற அவரது விளக்கம் குறித்தும் கட்சிக்குள் கேள்விகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சொத்து மதிப்பு கணக்கு
அரசியலை பொறுத்தவரை வாக்குறுதி என்பது வெறும் சொற்கள் அல்ல, அது ஒரு செயல் வடிவம். குறிப்பாகத் தேர்தல் நேரத்தில் நிதி மேலாண்மை என்பது வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. லீமா ரோஸின் இந்த திடீர் நிலைப்பாடு அதிமுக தலைமைக்கு ஒரு சிந்தனையை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
காரணம், சமீபத்தில் தனது வேட்புமனுவில் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அவரின் சொத்து கணக்கு விவரம் வெளியானது.. பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவியான லீமா ரோஸ், தமிழ்நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடைய வேட்பாளராக உள்ளார்.. 139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துகள் அவருக்கு உள்ளன. கணவர் பெயரில் 3,262 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துகளும், வேட்பாளர் பெயரில் 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளும் உள்ளதாக பிரமாணப் பத்திரத்திலும் அவர் தெரிவித்திருந்தார்,
எனினும், ஒரு வேட்பாளரின் நிதி வலிமையை மட்டும் நம்பி தொகுதி ஒதுக்கீடு செய்வது, சில நேரங்களில் கட்சியின் வியூகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி கருத்து வேறுபாடு?
இப்போது லீமா ரோஸிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.. இது தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் முடிந்த பிறகு லீமா ரோஸ் மீதான தலைமையின் அணுகுமுறை நிச்சயம் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது.
அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல, அதேசமயம் செய்த சத்தியத்தை மீறுவது என்பது ஒருபோதும் அரசியல் முதிர்ச்சியாகக் கருதப்படாது. லால்குடி தேர்தல் களம் இப்போது ஒரு தனிநபர் போட்டியாகத் தெரியாமல், தலைமைக்கும் வேட்பாளருக்கும் இடையிலான கவுரவப் போராட்டமாக மாறியுள்ளதாக தெரிகிறது.
இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications