பாதுகாப்பு சிக்கல்! லியோ அதிகாலை 4 மணி காட்சி அனுமதிக்கப்படுமா? ஹைகோர்ட்டில் நாளை தீர்ப்பு
சென்னை: லியோ திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில், 'லியோ' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது நேரம் குறிப்பிடாமல் ஒரு நாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, 'லியோ' படக்குழு தரப்பிலிருந்து 'அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20 ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 'லியோ' சிறப்புக் காட்சிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சம்பத் முன்பு அவசர முறையீடு செய்தனர்.
லியோ படத்தை திரையிட காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும், அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக ஒரு மணிக்கு விசாரிப்பதாக நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த வழக்கு மீது விசாரணை நடந்தது. அப்போது லியோ திரைப்படத்தை அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் காட்சிக்கு அனுமதித்தால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதம் செய்த நீதிபதி கூறுகையில் ஒரு நாளை 6 காட்சிகளை திரையிடும் அளவுக்கு நேரம் இருக்கிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அனிதா , ரசிகர்கள் காட்சியை அனுமதிக்கக் கூடாது என்ற மதுரை வழக்கு தொடர்பான ஆவணங்களை இங்கு தாக்கல் செய்யுங்கள். இந்த வழக்கில் நாளை முதல் வழக்காக தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications