விஜய் வரட்டும்.. அவர் கறைபடியாதவர்? அவைத் தலைவர் பதவி உறுதியா? பொடி வைத்த பழ கருப்பையா
சென்னை: விஜய்யின் புதிய அரசியல் கட்சி தற்போது தமிழ்நாட்டுக்கு தேவையான ஒன்று என்று கூறியுள்ள பழ கருப்பையா அக்கட்சியில் இணைய இருப்பது தொடர்பாக வெளியாகும் செய்திகள் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
விஜய் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். தலைவராக விஜய் இருக்கிறார். ஆனால், அவர் கட்சி தொடங்கியதிலிருந்து தவெகவில் அவைத் தலைவராக செஞ்சி ராமச்சந்திரன் வரப் போகிறார் என்றார்கள். அவருக்கு 80 வயதாக போகிறது. ஏறக்குறைய அவர் அரசியல் களத்திற்கு வந்து ஆக்டிவ் ஆக வேலை செய்வாரா என்பதே தெரியவில்லை. அவருடன் பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரன் இப்போதுவரை அரசியல் களத்தில் இருக்கிறார். ஓபிஎஸ் அணியில் ஒரு முளையாக இருந்து செயல்படுகிறார்.

ஆனால், திமுகவிலிருந்து மதிமுகவுக்குப் போனார். அங்கேகூட அவர் தீவிரமாகச் செயல்படவில்லை. அதன்பின்னர் ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவுக்கு வந்தார். பலருக்கு இப்போது அவர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தெரியாது. அவரை விஜய் அவைத் தலைவராக்க இருக்கிறார் என்கிறார்கள்.
அடுத்து இப்போது விஜய் கட்சியின் அவைத்தலைவராக 'சர்க்கார்’ படத்தில் இணைந்து நடித்த பழ கருப்பையாவைப் போட இருப்பதாகப் பேச்சுகள் அடிபடுகின்றன. பழ கருப்பையா காங்கிரஸ், திமுக, ஜனதா தளம், ஜனதா கட்சி, மதிமுக, அதிமுக,மநீக எனப் பல கட்சிக்குச் சென்றவர். அவர் இல்லாத கட்சி பாமக, விசிக ஆகியவை மட்டும்தான். இப்போது விஜய் கட்சியில் அவர் அவைத்தலைவர் என்கிறார்கள். முதலில் விஜய் கட்சியில் அவைத் தலைவர் என்ற பதவி இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஆனால், ஊகத்தில் பலர் சங்கை ஊதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விஜய் கட்சியில் இணைவது பற்றி பழ கருப்பையா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “தமிழ் நாட்டிற்கு ஒரு புதிய கட்சி தேவைப்படுவது உண்மை. ஏனெனில் பழைய கட்சிகள் எல்லாம் கறைபடிந்துபோய் உள்ளன. திமுக ஊழல் கட்சி. அவர்களின் குடும்ப அரசியல் நாட்டை வீணாக்கி விட்டது. குடும்ப ஆட்சி ஒழிய வேண்டும்.
விஜய் புதிய கட்சியாக வருவதால் அவர் கையில் கறை இல்லை. இனிமேல் அவர் ஆட்சிக்கு வந்தால்தான் நாம் அவர் மீது பழி சுமத்த முடியும். இப்போதுதான் அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் கையை இன்னும் திறக்கவில்லை. திறந்து காட்டினால்தான் என்ன இருக்கிறது என்பது தெரியும்? அவரை எடுத்த உடனேயே விமர்சிக்கக் கூடாது.
ஆனால், அவர் ஒரு கொள்கை தெளிவுடன் இருப்பது நல்லது. ஒரு பக்கம் பெரியார் சமாதிக்குப் போகிறார். மற்றொரு பக்கம் சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்து சொல்கிறார். இவை எல்லாம் முரண்பட்ட கொள்கைகள். அதை விஜய்க்கு ஆலோசனை சொல்வார்கள் உணர்த்த வேண்டும்?
விஜய்யுடன் நான் சேர்ந்து பயணிப்பேனா என்பது தேவையற்ற கேள்வி. ஆகவே, அதற்குப் பதிலளிக்க நான் விரும்பவில்லை. எனக்கு விஜய்யுடன் ஒரு தொடர்பும் கிடையாது. நான் அவருக்கு ஒரு ஆலோசனையும் சொல்லவில்லை. அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அவரை எனக்குத் தெரியும். என்னை அவருக்குத் தெரியும். பொதுவாக என்னிடம் முன்வைக்கப்படும் விஜய் கட்சி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறேன்.
வெளிப்படையாக சீமானுடன் மட்டும் கூட்டணி வைக்கவேண்டாம் எனப் பேட்டிகள் வழியாக ஆலோசனையை விஜய்க்கு முன்வைத்தேன். ஏனென்றால், தமிழ் பேசாதவர்களின் 20% வாக்குகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்த மக்கள் அனைவரும் சீமானுக்கு எதிராகக் கொதித்துப் போய் உள்ளனர். எனவே சீமானுடன் சேர்வது விஜய்க்கு நல்லது அல்ல” என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications