Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛இனி பொறுமையில்லை’’.. தொடர் போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ.. முதல்வர் ஸ்டாலினுக்கு பரபர கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பல கட்ட போராட்டம் நடத்தியும் முதலமைச்சர் தங்களை அழைத்து பேசவில்லை என்று கூறி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. எனினும் இவர்களது கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே தற்போது தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது குறித்து முதலமைச்சருக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில்,

Letter to Chief Minister M.K.Stalin that JACTO - GEO organization will continue protest

"ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக எங்களுடைய வாழ்வாதார உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கான உரிமைகள், சலுகைகள் அனைத்தும் நாங்கள் போராடிப் பெற்றவை என்பது தாங்கள் அறியாததல்ல. 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும் சரி, அந்த ஆட்சி 2016ல் தொடர்ந்த பின்னரும் சரி, எங்களின் உரிமைகளும், சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் தொடர்ந்து எங்கள் வாழ்வாதாரங்கள் நசுக்கப்பட்டும் வந்துள்ளன.

கடந்த 2003ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011ம் ஆண்டில் அரசு ஊழியர்களின் வாக்குகளை பெறுவதற்காக, தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி, எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்.

அந்த காலகட்டத்திலும் சரி, அவருடைய ஆட்சி 2016ல் தொடர்ந்த போதும் சரி அரசுப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டிருந்தன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி எங்கள் வாழ்வாதாரங்களுக்கான நியாயமான போராட்டங்களை நாங்கள் தொடங்கியபோது அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களாகிய எங்களுடைய கோரிக்கைகளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காததோடு, எங்களை நேரில் சந்தித்து எங்கள் முறையீடுகளை கேட்பதற்குக் கூட மனமில்லாதவராக அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை உதாசீனப்படுத்தினார்.

அந்த சமயத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்த தாங்கள் (மு.க ஸ்டாலின்), எங்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை புரிந்தவராக நாங்கள் நடத்திய கூட்டங்கள், வடிவமைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் கலந்து கொண்டு எங்களில் ஒருவராக நின்று எங்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தினீர்கள். அதோடு மட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கைகள அனைத்தையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியும் அளித்தீர்கள்.

எங்களின் நம்பிக்கைகள் மேலும் உறுதிப்படும் வகையில் 2021 தேர்தல் அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் திமுக ஆட்சிக்கு வந்ததும் வழங்கப்படும் என்றும் குறிப்பாக புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தீர்கள். அதன்மூலம் எங்களின் நம்பிக்கையை அசைக்கமுடியாத உறுதியான நம்பிக்கையாக மாற்றினீர்கள்.

Letter to Chief Minister M.K.Stalin that JACTO - GEO organization will continue protest

அதனால் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 5 சதவீத மக்கள் தொகை உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒட்டுமொத்தமாக தாங்கள் அரியணை ஏற குடும்பத்தோடு வாக்களித்தனர். அவற்றையெல்லாம் மறக்காதவரான தாங்கள் அவ்வப்போது நான் கொடுத்த உறுதிமொழிகளை மறைக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. தமிழ்நாட்டின் நிதிநிலை சரியாகும் வரை கொஞ்ச காலம் பொறுத்திருங்கள் என்று கூறி வருகிறீர்கள்.

தாங்கள் 2021இல் பதவியேற்றபோது கரோனா காலகட்டமாக இருந்ததாலும் அதை சமாளிக்க போதிய நிதி, அரசு கஜானாவில் இல்லை என்றதால், உங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று கேட்காமல் அமைதியாகவே இருந்தோம்.

ஆண்டு ஒன்றானது, இரண்டானது தற்போது மூன்றாமாண்டு முடியும் தறுவாயில் எங்கள் கோரிக்கைகளில் ஒன்றை கூட நிறைவேற்ற தாங்கள் உத்தரவிடாத நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் கொந்தளிப்பான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்களின் பொறுமைகள் சுக்குநாறாகியுள்ளது. திமுக தலைமையிலான அரசும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏமாற்றுகிற சராசரி அரசாக இருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

எங்களின் எல்லா நியாயங்களையும் புரிந்த, எங்களுக்காக எங்களுடன் நின்று போராடிய நீங்களே எங்கள் நியாயங்களை புரிந்துகொள்ள மறுப்பது துரதிருஷ்டவசமானதாகும். உரிமைகள் தரமறுக்கும் இடங்களில் போராட்டங்களை கையிலெடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னரும், தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை அழைத்து பேசாததும், கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராததும் எங்களை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.

இரண்டரை ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இனிமேலும் பொறுமையோடு காத்திருப்பது அர்த்தமற்றது என உணர்ந்த நிலையில், ஜாக்டோ ஜியோ ஜீவாதாரப் போராட்டங்களை அறிவித்ததுள்ளது.

போராட்ட விவரம்:

ஜனவரி 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம்.

ஜனவரி 30-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம்.பிப்ரவரி 5-ம் தேதி முதல் 9ம் தேதி வரை அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது (பி.ஜே.பி., அ.தி.மு.க. தவிர்த்து).

பிப்ரவரி 10-ம் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு.பிப்ரவரி 15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்.

பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.

கோரிக்கைகள்:

கடந்த 2003 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

காலவரையின்ற முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்.

கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்ஆர்பி (MRB) செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியார்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் - அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப் பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளிலும், பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியார்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்" என முதலமைச்சருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+