“வானவில்” என கலாய்க்காதீங்க.. எங்க உணர்வுகளையும் மதிங்க.. Pride பேரணியில் பங்கேற்றவர்கள் ஆதங்கம்!
சென்னை: "வானவில் நண்பர்கள்" என கலாய்ப்பது சரியல்ல.. எங்கள் உணர்வுகளையும் மதியுங்கள் என சென்னையில் இன்று நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் பங்கேற்றவர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளனர்.
LGBTIQA+ மக்கள் ஒன்றுகூடி ஜூன் மாதத்தில் பிரமாண்ட பேரணியை உலகெங்கிலும் நடத்தி வருகின்றனர். LGBTIQA+ மக்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சுயமரியாதை பேரணியை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சுயமரியாதை பேரணி இன்று சென்னையில் நடைபெற்றது. தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்தப் பேரணியை நடத்தினர். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற ஊர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இந்த ஆண்டு இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். LGBTIQA+ மக்களின் பெற்றோரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
ஆண், பெண், திருநங்கை, திருநம்பி என்ற பாலின வேறுபாடுகளை மறந்து தம் உணர்வுகளுக்கு தகுந்தாற்போல பல வண்ண ஆடை அணிந்து, சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து பேரணியில் நடனமாடி மகிழ்ந்தனர். மேளம், தப்பு தாளம் முழங்க, ஆடிப்பாடி உற்சாகத்தில் திளைத்தனர்.
LGBTQ+ மக்கள் மட்டுமின்றி அவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக செயற்பாட்டாளர்களும் இதில் கலந்துகொண்டனர். பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்ற சிலர் கூறுகையில், "பாலினம் என்பது ஆண், பெண் என்பது மட்டும் அல்ல. யாரும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அன்பு அனைவருக்கும் பொதுவானது, அனைத்து மக்களும் சமம். யாரையும் பாலினம் சார்ந்து ஒடுக்குவது தவறானது" எனத் தெரிவித்தனர்.
இந்தப் பேரணியில் பங்கேற்ற பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், "இந்த பேரணியில் நிறைய மக்கள் வந்து பங்கேற்று இருக்கின்றனர். கல்வி நிலையங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும் ஒடுக்குமுறை, ஒதுக்குதல் இருந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த பேரணி மூலமாக, அனைவருக்கும், LGBTQ மக்கள் பற்றிய புரிதல் வரும் என்று நம்புகிறோம்.
பாலியல் உணர்வு, பாலினம் சார்ந்த அறிவு அனைவருக்கும் இருக்க வேண்டும். எங்கள் உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எங்களை தனிப்படுத்தாமல், சக மனிதர்களாக மதித்து உடன் பயணித்தாலே போதும். சமூக ஊடகங்களில் வானவில் நண்பர்கள் என்பது போன்ற சொல்லாடல்களால் எங்களை குறி வைத்து கேலி செய்வது தவிர்க்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications