எம்.ஜி.ஆருக்கு எழுதியவை எல்லாம் ஹிட்.. காலத்தால் அழியாத கருணாநிதி வசனங்கள்!
சென்னை: சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்க்கை; சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கை. இதில் 23 வயதில் தொடங்கியது அவரின் திரை வாழ்க்கை.
அதாவது 1947இல் வெளியான 'ராஜகுமாரி' தொடங்கி, 2011இல் திரைக்கு வந்த 'பொன்னர் சங்கர்' வரை அவரது கலை உலக பூமி நிற்காமல் சுழன்றது.

நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கி, பிரசாந்த்வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
இவரது எழுத்தாற்றல் மூலம் வெளிச்சம் பெற்றவர்தான் சிவாஜி கணேசன். 'பராசக்தி' அவருக்குப் பெரிய பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. அதேபோல் 'ராஜகுமாரி' மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தை ஈர்த்தார் 'ராம்சந்த்'. அவரது புகழுக்கும் இவரின் வசனம்தான் காரணம்.
அன்று இவரது வசனத்தில் 'ராம்சந்த்' ஆக நடித்தவர், பிற்காலத்தில் 'எம்.ஜி.ராமச்சந்திரன்' ஆகப் பரிமாணம் பெற்றார்.
இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரர், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. தமிழக அரசியல் வரலாற்றில் இரு துருவங்களாகக் காட்சிப்படுத்தப்படும் கருணாநிதியும் எம்.ஜி.ராமச்சந்திரனும் ஒரு காலத்தில் இணைபிரியாத உயிர் நண்பர்கள்.

காங்கிரஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்த எம்.ஜி.ராமச்சந்திரனை, திராவிட இயக்கத்தின் பக்கம் சாயவைத்தவர் மு.கருணாநிதிதான். இவரது வசனத்தில் வெளியான 'ராஜகுமாரி'யில்தான் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்த இடத்தைப் பெற்றார்.
1936 இல் நடிக்கத் தொடங்கியவர், எம்.ஜி.ஆர். 'ராஜகுமாரி'க்கு முன்னர் கிட்டத்தட்ட 14 படங்களில் நடித்தவர். இருந்தாலும் அவர் தனித்து பெருமைபெற்றது 'ராஜகுமாரி'யில்தான். இந்தப் படத்தின் மூலம்தான் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்குநராக அறிமுகமானார்.
இவர்தான், 'குடியரசு' பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்த கருணாநிதியை, திரைத்துறைக்கு வசனம் எழுத அழைத்து வந்தவர் என்பது உலகம் அறிந்த உண்மை.
புராணக் கதைகளால் புளித்துப்போய்க் கிடந்த தமிழ் சினிமாவுக்கு தரமான வரலாற்று அடையாளத்தை வழங்கியது, கருணாநிதியின் பேனா. அதுவரை திரை உலகம் கேட்காத தித்திக்கும் தமிழ் வசனங்களால் திரை ரசிகர்களின் செவிகளுக்கு இன்பச் சுவையை ஊட்டினார் கருணாநிதி.
இதை அந்தக் கால திரை விமர்சகர்கள் 'வசனங்களில் கூர்மையும் ரசனையும் கூடியுள்ளது' எனக் கூறி பாராட்டினர்.
'ராஜகுமாரி' படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த காலகட்டத்திலேயே வாரத்திற்கு 2 பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு அரசியலில் அதிக பிசியாக இருந்தார் கருணாநிதி.

படப்பிடிப்பின்போது இடையிடையே திடீர்திடீரென்று தலைமறைவாகும் கருணாநிதியைக் கண்காணித்த எம்.ஜி.ஆர்., ஒரு நாள் அவரை மறித்து குறுக்கு விசாரணை செய்யவே... பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவரும் உண்மையைப் போட்டு உடைத்தார் மு.க..
அதன் பிறகு காந்தத்தைப் பார்த்ததும் தானே ஓடிவந்து கொட்டிக்கொள்ளும் ஊசியைப் போலத் திராவிட இயக்கத்தின் பக்கம் சாய்ந்தார் எம்.ஜி,ஆர்.
கருணாநிதியின் திரை வசனத்தில் வெளியான 'ராஜகுமாரி' பற்றிச் சொல்லச் சுவையான நிகழ்ச்சி ஒன்று உண்டு. படத்தில் பற்றி எரியும் தமிழ் வசனங்களை இட்டு நிரப்பி இருந்தார் கருணாநிதி. அந்தப் படத்தை அவரது தந்தை முத்துவேலர் பார்க்க விரும்பினார். ஆசையை தன் மகனிடமும் சொன்னார்.
உடல்நலம் இல்லாமல் படுக்கையில் கிடந்த அவருக்கு பார்வை முழுதாகப் போய்விட்டது. திரையில் தெரியும் உருவங்களை அவரால் உணரவே முடியாது. என்ன சொல்லி அப்பாவை ஆறுதல்படுத்துவது? யோசித்தார் கருணாநிதி.
அதை உணர்ந்த முத்துவேலர், "என் பார்வைதான் போய்விட்டது. ஆனால் தெளிவாகக் கேட்க முடியும். நீ படம் எடுக்கவில்லை. வசனம் தான் எழுதியிருக்கிறாய். எனவே உன் எழுத்தை என்னால் கேட்க முடியும். அழைத்துப் போ" என்றார்.

அதைக் கேட்ட அன்பு மகன் கருணாநிதி, ஆடிப் போனார். அப்பாவை அழைத்துக்கொண்டு படம் பார்க்கவும் போனார். தீயாகத் தெறித்த வசனத்தைக் கேட்ட முத்துவேலர் தன் மகனைப் பாராட்டினார்.
"உன் அடுத்த கதையை எழுதி முடித்துவிட்டாயா?" என்றார். இன்னும் இல்லை என்றார் கருணாநிதி. அந்த வயதான தகப்பன் சொன்னார், 'என் கதை முடியப் போகிறதப்பா'. என்று. அது சில நாள்களில் உண்மையாகிவிட்டது.
எம்.ஜி.ஆருக்கு 'மந்திரி குமாரி', 'மலைக்கள்ளன்' ஆகிய படங்கள் அவரது வாழ்வில் மறக்க முடியாத திருப்புமுனையாக அமைந்தன. கருணாநிதியின் கதை - வசனத்தில், மொத்தம் 9 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில், மு.கருணாநிதியை 'ஆண்டவரே' என்றுதான் எம்.ஜி.ஆர். அழைத்து வந்தார்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி 90 வயதில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார் கருணாநிதி. அது 2013 ஆம் ஆண்டு 'ஃபிரண்ட் லைன்' அக்டோபர் 18 இதழில் பிரசுரமாகியது.
"புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். 'ராஜகுமாரி'யில் முதன்முதலாகக் கதாநாயகனாக நடித்தார். அதற்குமுன்பே அவர் சில படங்களில் நடித்துவந்தார் என்ற போதிலும், அவை எல்லாம் கதாநாயகன் பாத்திரங்கள் அல்ல; காந்தி பக்தரான எம்.ஜி.ஆருடன் எனக்கு நட்பு தோன்றிய காலம் அதுதான்.

அண்ணாவின் நூல்களை அவருக்குக் கொடுப்பேன்; காந்தியின் நூல்களை அவர் எனக்குக் கொடுப்பார். எங்களுக்கிடையே அடிக்கடி விவாதங்கள் நடைபெறும்; அவற்றின் விளைவாக அவர் கழக அணியில் இணைந்துகொண்டார்.
கோவைக்கு அடுத்த சிங்காநல்லூரில் 10 ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு, நானும் என் மனைவி பத்மாவும் தங்கியிருந்தோம். அந்தக் குருவிக் கூட்டினுள்ளே உட்கார்ந்துகொண்டு நான் எழுதிக் குவித்தவை ஏராளம்.
'அபிமன்யு' என்கிற புராணப் படத்திற்குப் புதுமையான வசனங்களை எழுகின்ற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தப் படம் வெளிவந்தபோது என் மனைவியையும், நண்பர்களையும் அழைத்துக்கொண்டு திரையரங்கிற்குச் சென்றேன்.
ஆனால், அந்தப் படத்தில் நான் எழுத்துப் பணியாற்றிய செய்தி திரையில் விளம்பரப்படுத்தப்படவே இல்லை. மறுநாளே வீட்டைக் காலி செய்துவிட்டு திருவாரூக்குத் திரும்பிவிட்டேன்" என தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் கருணாநிதி.
மேலும் அவர் அதே கட்டுரையில், "நான் எழுதிய 'மருத நாட்டு இளவரசி' என்ற படத்திலும் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து, அந்தப் படமும் தமிழக மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுச் சிறப்பாக ஓடியது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், தன்னுடைய 'நாம்' படத்தில் நடித்த எம்.ஜி.ஆர். குறித்து சில நினைவுகளை எழுதி இருக்கிறார் கருணாநிதி. அவர், "முழுக்க முழுக்க தொழிலாளி வர்க்கத்தின் குரலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம், 'நாம்'.
அப்போதே கம்யூனிச வேகம் எந்த அளவிற்கு என் உள்ளத்தில் இடம்பெற்றிருந்தது என்பதற்கு அந்தப் படத்திலே ஒரு உரையாடல்!
படத்தில் ஒரு பண்ணையாரிடம், பாட்டாளியின் சார்பில் எம்.ஜி.ஆர். வாதாடுவார். பண்ணையார் கோபமடைந்து, 'என்னடா? ஆச்சரியக் குறி போடுகிறாய்?' என்பார்.
உடனே தொழிலாளிக்காக வாதாடும் எம்.ஜி.ஆர்., 'ஆச்சரியக் குறிதான் ஜமீன்தார் அவர்களே, கொஞ்சம் வளைத்தால் கேள்விக்குறியாக மாறிவிடும்; ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக் குறிக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை' என்று பதிலளிப்பார்" என்று எம்.ஜி.ஆரை எப்படி கம்யூனிசம் பேச வைத்தேன் என்பதையும் விவரித்திருக்கிறார் கருணாநிதி.
முதலில், எம்.ஜி.ஆருக்கு திராவிட இயக்கம் பற்றி நேரடியாக கொள்கை வகுப்பு எடுத்த கருணாநிதிதான், பின்னாளில் கம்யூனிச வசனமும் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்பது சிறப்பான செய்தி.












Click it and Unblock the Notifications