சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில், 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் சுமார் 177 கிராம ஊராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்ய மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தவும், மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை சமநிலைப்படுத்தவும் இந்த மறுவரையறை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வார்டுகளின் எல்லைகளும், உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பல கிராமப்புற பகுதிகளில் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. அதேநேரத்தில் சில பகுதிகளில் மக்கள் தொகை குறைந்தும் காணப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல்
இதனால் தற்போதுள்ள வார்டு அமைப்புகளில் மக்கள் தொகைகுறித்த தெளிவான தரவுகள் தமிழக அரசிடம் இல்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்களில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை சரிசெய்வதற்காக வார்டு மறுவரையறை பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு வார்டிலும் சமமான மக்கள் தொகை இருக்க வேண்டும் என்பது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
வார்டு மறுவரையறை
இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நிர்வாக வசதியையும் கருத்தில் கொண்டு புதிய வார்டு எல்லைகள் உருவாக்கப்பட உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் விரிவடைந்த குடியிருப்பு பகுதிகள், புதிய குடியிருப்பு திட்டங்கள் மற்றும் மக்கள் அடர்த்தி அதிகரித்த பகுதிகள் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
உள்ளாட்சி பிரதிநிதிகள்
தேர்தல் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதும் இந்த மறுவரையறையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். ஒரு வார்டின் எல்லைகள் தெளிவாக இருப்பதால், வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை எளிதில் அடையாளம் கண்டு தொடர்பு கொள்ள முடியும். அதேபோல் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தங்களது வார்டு மக்களின் தேவைகளை சரியாக அறிந்து செயல்பட முடியும்.
வாக்காளர் பட்டியல்
முதற்கட்டமாக, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் தற்போதைய புவியியல் எல்லைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல் வாக்காளர் பட்டியல், மக்கள் தொகை விவரங்கள் மற்றும் நிர்வாக எல்லைகள் உள்ளிட்ட தகவல்களும் சரிபார்க்கப்படுகின்றன. அதன்பிறகு புதிய வார்டு எல்லைகள் மற்றும் தொகுதிகள் தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்படும். இந்த வரைவு பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம்
புதிய எல்லைகள் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும். வரைவு அறிவிப்புக்கு பிறகு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். தேவையான இடங்களில் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும். பின்னர் மாநில தேர்தல் ஆணையம் இறுதி வார்டு வரையறையை அறிவிக்கும். இந்த மறுவரையறை நடவடிக்கை காரணமாக சில இடங்களில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், சில பகுதிகளில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல்
இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான அரசியல் வியூகங்களை வகுக்கும் பணியில் பல கட்சிகள் ஏற்கனவே ஈடுபட்டு வரும் நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் தொடங்கியுள்ளதால், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கலாம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications