திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்து.. தனி சின்னம்தான்.. வைகோ உறுதி
சென்னை: திமுக மதிமுக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று வைகோ தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுப்போம் என்றும் கூறியுள்ளார் வைகோ.
லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடு பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையொழுத்தான பின்னரும் மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகளிடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்றைய தினம் மதிமுக திமுக இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மதிமுகவை பொறுத்தவரை இரண்டு லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதி கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் திமுக தரப்பு ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தரப்படும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என உறுதியாக தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுகவுடனே கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், திமுக தரும் ஒரு தொகுதி தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கூறினர்.
இதனிடையே இன்றைய தினம் திமுக - மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, லோக்சபா தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு ஒரு லோக்சபா தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.
எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று பின்னர் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தனிச்சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என்றும் வைகோ உறுதியாக கூறியுள்ளார். ராஜ்யசபா சீட் குறித்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications