‛36 தொகுதியில் வெற்றி’.. தமிழகத்தில் திமுக கூட்டணி தான் கெத்து! அதிமுக, பாஜகவுக்கு ஷாக் தந்த சர்வே
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என ஜி நியூஸ்-மேட்ரிஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக தலைமையிலான கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது பற்றியும் இந்த கருத்து கணிப்பில் முக்கிய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. தமிழகத்தை பொறுத்தமட்டில் 39 நாடாளுமன்ற தொகுதி உள்ளன. தற்போது 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தான் எம்பிக்களாக உள்ளனர்.

இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில் திமுக கூட்டணி காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த முறையை போலவே 2 தொகுதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த தொகுதிகள் குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக இன்னும் தொகுதியை இறுதி செய்யவில்லை.
இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜி நியூஸ்-மேட்ரிஸ் சார்பில் கடந்த 5ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நாடு முழவதம் 543 தொகுதிகளில் மக்களிடம் கருத்துகள் கேட்டு கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது. 87 ஆயிரம் பெண்கள், 54 ஆயிரம் ஆண்கள் என மொத்தம் 1,67,843 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.
இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. மாநிலம் வாரியாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் திமுக தலைமையிலான கூட்டணி தான் அதிக இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி வரும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 36 தொகுதிகளில் திமுக கூட்டணி தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என நினைக்கும் திமுக கூட்டணிக்கு இந்த முடிவு என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களை வென்றது. ஆனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 36 இடங்களில் தான் கிடைக்கும் என்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு இடத்தில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தொடர்ந்து வளர்ந்து வருகிறது என அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் இந்த கருத்து கணிப்பு பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது. மாறாக கடந்த 2019 தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் இருந்து எம்பிக்கள் கிடைக்கவில்லை.
அதேபோல் தமிழகத்தின் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 2 தொகுதிகளில் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் அதிமுக தேனியில் (ஓபிஎஸ் மகன் ஓபி ரவீந்திரநாத்) மட்டும் வென்றது. இந்த முறை அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். இந்நிலையில் தான் அதிமுகவுக்கு 2 தொகுதிகள் தான் கிடைக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications