28 தொகுதிகளில் பாஜக போராட்டம்? ஒரு நேரடி ரிப்போர்ட்! மகாராஷ்டிராவில் வீசிய மோடி எதிர்ப்பு அலை!
சென்னை: மகாராஷ்டிராவில் குறைந்தது 28 தொகுதிகளை பாஜக இழக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. அம்மாநிலத்தில் கிராமப்புற மக்கள் தொகை என்பது 55% ஆக உள்ளது. நகரப்புற மக்கள் தொகை என்பது 45% ஆக உள்ளது.

இந்த மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலுவாக உள்ளன. ஆனால், இந்தத் தேர்தல் களத்தில் சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்து தேர்தலைச் சந்திக்கின்றன.
மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு சிவசேனா உள்ளது. இவர் 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்குக் கிட்டத்தட்ட 15 தொகுதிகள் பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்டது.
அதைப்போல துணை முதல்வர் அஜித்பவார் 10 இடங்களைக் கேட்டார். அவருக்குக் கிடைத்ததோ வெறும் 4 தொகுதிகள்தான்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ சின்னம் ஏக்நாத் ஷிண்டேவிடம் உள்ளது. அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் அஜித்பவாரிடம் உள்ளது.

அதிகாரப்பூர்வ சின்னங்களை வைத்துக் கொண்டு குறைவான தொகுதிகளில் இவர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இதற்கு மாறாக உத்தவ் தாக்ரேவி சிவசேனா 21 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. சரத்பவார் கட்சி 10 இடங்களில் நின்றுள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டிப்போட்டுள்ளது. ஆக, இந்த மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி எந்தச் சிக்கலும் இல்லாமல் தேர்தலைச் சந்தித்துள்ளது.
ஆனால், பாஜகவின் என்டிஏ கூட்டணியில் அப்படி இல்லை. தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தியில் உள்ளார் அஜித்பவார். ஏக்நாத்ஷிண்டேவும் மகிழ்ச்சியாக இல்லை.
எனவே பாஜக இந்த மக்களவைத் தேர்தலில் முன்பு வெற்றி பெற்ற 41 இடங்களை மீண்டும் பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் எப்படி வரும்? பாஜக பழைய வெற்றியைத் திரும்பப் பெறுமா? எனப் பல கேள்விகளுக்கு மும்பை பத்திரிகையாளர் மும்பை குமணராசன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் பற்றி பேசுகையில், "இந்தத் தேர்தல் இந்திய அரசியலில் மாற்றத்தை உண்டாக்கப் போகின்ற தேர்தல். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் எப்படி வருகிறதோ, அதே முடிவுதான் மத்தியிலும் ஏற்படும். ஆக, மத்தியில் ஆட்சி மாற்றத்தை முடிவு செய்ய உள்ளது மகாராஷ்டிராதான்.
இந்தியாவில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட முதல் மாநிலம் உபி. 2வது மாநிலம் மகாராஷ்டிராதான். மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. உபியில் எந்தளவுக்கு பாஜக கவனம் செலுத்துகிறதோ அதே அளவுக்கான முக்கியத்துவத்தை மகாராஷ்டிராவுக்கும் தந்திருக்கிறது பாஜக.
கடந்த 2019இல் மகாராஷ்டிராவில் 41 தொகுதிகளை பாஜக வென்றது. மீண்டும் அதை இந்தத் தேர்தலில் தக்கவேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு உள்ளது. இதைவிட அதிக தொகுதிகளைப் பெற்றால்தான் பாஜகவின் செல்வாக்கு வலுப்பெறும் என்ற நிர்ப்பந்தம் வேறு அவர்களுக்கு இருக்கிறது. அப்படி அதிகம் பெற்றால்தான் பாஜகவின் 400 தொகுதிகளுக்கு மேல் எனக் கனவை எட்ட முடியும்.
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதை ஏன் 5 கட்டங்களாக வடிவமைத்தார்கள் என்பதே சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.2 கோடி. இந்தியாவில் ஒட்டுமொத்த வாக்காளர்கள் 98 கோடி. அதில் கிட்டத்தட்ட 10% வாக்காளர்கள் மகாராஷ்டிராவில்தான் உள்ளனர்.
தமிழ்நாட்டில் எப்படி வடதமிழகம், தென் தமிழகம், கொங்கு மண்டலம், டெல்டா என தனித்தனியாகக் குறிப்பிடுகின்றோமோ அதைப்போல மகாராஷ்டிராவில் விதர்பா, மரத்வாடா, மேற்கு மகாராஷ்டிரா, வடக்கு மகாராஷ்டிரா, கொங்கன் என மொத்தமாக 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவைப் பல ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சிதான் ஆண்டுவந்தது. அதன்பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆண்டது. அடுத்து சிவசேனா ஆட்சி நடந்து வந்தது.
குறிப்பாக 90களுக்குப் பிறகு பாஜக, சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும்தான் தேர்தலில் போட்டியிட்டு வந்தன.
ஆனால், 2014 சட்டமன்றத் தேர்தலில் இந்த அனைத்து கட்சிகளுமே தனித்தனியாகப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தங்களின் உண்மையான பலம் என்ன என்பதைப் பார்க்க முடிவு செய்தன. அதன்பின்னர் தான் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியாக சிவசேனா இரண்டாக உடைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாகப் பிளந்தது. இதற்கு பாஜகதான் காரணமாக இருந்தது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பாஜக உடைத்துவிட்டாலும் அந்தக் கட்சியின் உண்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்ரே பக்கமும் சரத்பவார் பக்கமும் தான் இருக்கிறார்கள். அந்தக் கோபத்தை இந்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் எனக் கணிப்புகள் சொல்கின்றன. அது உண்மையும் கூட.
மகாராஷ்டிராவில் பாஜகவுக்குத் தோராயமாக 28% வாக்குகள் உள்ளன. சிவசேனாவுக்கு 24% வாக்குகள் உள்ளன. காங்கிரசுக்கு 17% உள்ளது. தேசியவாத காங்கிரசுக்கு 16% உள்ளது. இவை தவிர்த்துச் சிறு சிறு கட்சிகளுக்கான வாக்குவங்கி என்பது ஒரு 12% உள்ளது.
அப்படிப் பார்த்தால் வெறும் 28% வாக்குகளை வைத்துக் கொண்டு 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பெற்றி வெற்றியை பாஜகவினால் இந்த முறை பெற முடியாது. பழைய வெற்றியை அடைவதற்கே சுமார் 45% முதல் 50% வாக்குகள் தேவை. இப்போது 22% வாக்குகள் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகிய இருவரால் நிரப்ப முடியுமா? என்பது மிகப்பெரிய சந்தேகம்.
தேர்தல் கள நிலவரத்தில் சரத்பவாரை பாஜக அவமதித்ததும் உத்தவ் தாக்ரேவை பாஜக வீழ்த்தியதும் ஒரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு அனுதாப அலையே வீசுகிறது.
இவற்றைத் தவிர்த்து பாஜக ஆட்சியால் மகாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வழிகளில் பாதித்துள்ளது. இங்கு வரவேண்டிய தொழிற்சாலைகளைக் குஜராத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதைப்போல விவசாயிகள் பிரச்சினை பெரிய அளவில் உள்ளது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக பாஜக சொன்ன வாக்குறுதியில் 1% கூட நிறைவேற்றப்படவில்லை.
ஆகவே பாஜக கூட்டணி 20 இடங்களில் வெல்ல வாய்ப்புகள் உள்ளன. அதுவே அதிகம். மீதம் உள்ள 28 தொகுதிகளை சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்ரே அணியே கைப்பற்றும்" என்கிறார்












Click it and Unblock the Notifications