ஒரே நாளில்.. அடுத்தடுத்த முக்கியமான முடிவுகள்.. பிசினஸ் மோடிற்கு மாறிய விஜய்.. கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை கொண்டு வருவதில் முதல்வர் விஜய் தீவிரமாக இருப்பதாக தோன்றுகிறது. இதற்கான முக்கியமான சில ஆலோசனைகளை, முடிவுகளை விஜய் எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே தமிழக நிர்வாகத்தை முழுமையாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் வேகத்திற்கு மாற்றியிருக்கிறார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய். வழக்கமாக புதிய அரசுகள் அமைந்தவுடன் இருக்கும் 'ஹனிமூன் பீரியட்' எனப்படும் ஆரம்பகட்ட நிதானத்தை முற்றிலும் தவிர்த்துவிட்டு, தவெக அரசு முதல் வாரத்திலேயே "பிசினஸ் மோடில்" களம் இறங்கியிருப்பது ஒட்டுமொத்த அரசியல் மற்றும் தொழில் துறையினரைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

நிர்வாகச் சீர்திருத்தம், நிதி வெளிப்படைத்தன்மை, உலகளாவிய முதலீடுகள், நகரக் கட்டமைப்பு என அனைத்து முனைகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழகத்தின் பொருளாதாரப் பாதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தத் தொடங்கியுள்ளன.
தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி மெகா திட்டம்!
இதற்கு மிக முக்கிய சான்றாக, தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான 'எச்டி ஹூண்டாய்' (HD KSOE) உயர் அதிகாரிகள் குழு, சென்னையில் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அமைந்துள்ளது. தூத்துக்குடியில் அமையவிருக்கும் பிரம்மாண்ட பசுமை கப்பல் கட்டும் தளத்திற்காக (Greenfield Shipyard Project) சுமார் 38,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் தென் தமிழகத்தில் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் 15,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சிப்காட் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இணைந்து இதற்கான ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெற்றுள்ள நிலையில், திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்த முழு நிர்வாக ஒத்துழைப்பையும் தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
விண்வெளித் துறையில் தமிழகத்தின் பாய்ச்சல் (IN-SPACe)
ஹூண்டாய் நிறுவனத்துடனான சந்திப்பு ஒருபுறமிருக்க, மறுபுறம் இஸ்ரோவின் குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மற்றுமொரு முக்கிய ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி அல்லிக்குளம் சிப்காட் வளாகத்தில், விண்வெளி வாகனங்களுக்கான 'பொது தொழில்நுட்ப வசதி மையம்' (Common Technical Facility) அமைப்பதற்காக மத்திய அரசின் 'இன்-ஸ்பேஸ்' (IN-SPACe) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பையும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் ஊக்குவிக்க 10,000 கோடி ரூபாய் இலக்குடன் புதிய விண்வெளி தொழிற்கொள்கை வேகமெடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய புதிய தொழிற்கொள்கையும் (New Industrial Policy 2026) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.
நிதி நிலைமை குறித்த 'வெள்ளை அறிக்கை'
நிர்வாகத்தை வேகப்படுத்துவதற்கு முன்பாக, மாநிலத்தின் தற்போதைய உண்மையான பொருளாதார நிலவரத்தை மக்கள் முன் வைப்பது அவசியம் என்ற நோக்கில், தவெக அரசு மாநில நிதியாதாரம் குறித்த 'வெள்ளை அறிக்கை'யை வெளியிட்டுள்ளது. இது கடந்த காலக் கடன்களையும், தற்போதைய நிதிச் சுமைகளையும் வெளிப்படையாகப் போட்டுடைத்துள்ளது. இதன் மூலம் வரவிருக்கும் நிதிச் சீர்திருத்தங்களுக்கும், புதிய திட்டங்களுக்கும் தேவையான அடித்தளத்தை அரசு தந்திரமாக அமைத்துள்ளது.
சிஎம்டிஏ மற்றும் டாஸ்மாக் சீர்திருத்தங்கள்
மக்களிடம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) அப்ரூவல் முறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல், வருவாயின் முக்கிய அங்கமான டாஸ்மாக் (TASMAC) நிர்வாகத்திலும் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு வெளிப்படையான டிஜிட்டல் கண்காணிப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், மின்சார வாரியம் (TNEB) மற்றும் போக்குவரத்துத் துறையின் கொள்முதல் ஆர்டர்களில் (Purchase Orders) வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சென்னையின் புதிய பெருந்திட்டமும் (Chennai New Master Plan) இறுதி வடிவம் பெற்றுள்ளது.
தேர்தல் பிரச்சார மேடைகளின் அரசியல் முழக்கங்களிலிருந்து, கோட்டையின் கோப்புகளுக்குள் அதிவேகமாகப் பாய்ந்து வரும் இந்த மாற்றங்கள், நிர்வாகத்தில் புதிய எனர்ஜியைக் கொடுத்துள்ளன. "பிளடி ஸ்வீட்" பாணியில் ஆரம்பித்துள்ள இந்த 'பிசினஸ் மோட்' வேகம், வரும் நாட்களிலும் தொடருமா என்பதைத் தொழில் உலகமும், தமிழக மக்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications