5 + 1.. அதிமுகவிடம் கேட்ட பிரேமலதா? இன்றைய கூட்டணி பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? முக்கிய தகவல்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பேசினர். இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை அதிமுக தொடங்கி உள்ளது. அதிமுகவில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அதேபோல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சிகள் உள்ளன.

பாமகவுடன் அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இன்னும் கூட்டணி முடிவாகவில்லை. அதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று தேமுதிகவுடன் அதிமுக தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.
அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எடப்பாடி பழனிச்சாமி குழு அமைத்துள்ளார். அந்த குழுவில் அங்கம் வகிக்கும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் சென்னை சாலி கிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு இன்று சென்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவர்கள் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் அரைமணிநேரம் நீடித்தது.
அதன்பிறகு அதிமுக தலைவர்கள் புறப்பட்டு சென்றனர். அப்போது எஸ்பி வேலுமணி கூறுகையில், ‛‛தேர்தல் தொடர்பாக இருபக்கமும் குழு அமைத்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது'' என்று மட்டுமே கூறிவிட்டு சென்றார். இருப்பினும் பிற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.
இத்தகைய சூழலில் தான் தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அதிமுக கூட்டணியில் தேமுதிக மொத்தம் 5 நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை கேட்டுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் தான் இருந்தது. மொத்தம் 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டது.
திருச்சி, கள்ளக்குறிச்சி, வடசென்னை, விருதுநகர் தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றி பெறவில்லை. இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 5 நாடாளுமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா எம்பி பதவியை தேமுதிக, அதிமுகவிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை கேட்ட அதிமுக தலைவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தகவல் தெரிவித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன












Click it and Unblock the Notifications