தமிழ்நாட்டில் இதுவரை பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் இவை தான்.. நீங்களே பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் பட்டியலை பாஜகவினர் வெளியிட்டுள்ளனர்.அந்த பட்டியலில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை உள்ளன. அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுக இன்னமும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை..
தமிழ்நாட்டில் 2019ம் தேர்தல் போல் இல்லாமல், 2014 போல் மாற்ற விரும்புகிறது பாஜக. 2014ல் பாமக, தேமுதிக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து தனி அணியாக பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. திமுக உடன் விசிக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அதிமுகவை பொறுத்தவரை தனித்தே 39 தொகுதியிலும் போட்டியிட்டது. இடதுசாரிகள் தனித்து போட்டியிட்டனர்

2014 தேர்தலில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி இரண்டு இடங்களில் வென்றது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி கணிசமாக வாக்கு வங்கியை அப்போது கைப்பற்றியது. பாஜக மட்டும் 5.5 சதவீதம் வாக்குகளை பெற்றது. அதிமுக 44.3 சதவீதமும், திமுக 23.4 சதவீதம் வாக்குகளையும், காங்கிரஸ் 4.3 சதவீதம் வாக்குகளையும் பெற்றது. ஆனால் 2019ல் தலைகீழாக மாறியது.
திமுக கூட்டணி 53.15 சதவீதம் வாக்குகளை பெற்று 38 இடங்களில் வென்றது. ஆனால் அதிமுக பாஜக கூட்டணி வெறும் 30.57 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றதுடன் ஒரே ஒரு இடத்தில் தான் வென்றது. பாஜகவால் அப்போது வெறும் 3.66 சதவீதம் வாக்குகளையே பெற முடிந்தது.

இந்நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டது.. தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்த கட்சிகள் பட்டிலைய பாஜகவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த பட்டியலில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்றவை உள்ளன.

அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுக இன்னமும் கூட்டணி குறித்து முறைப்படி அறிவிக்கவில்லை.. ஓ பன்னீர்செல்வம் அணி எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது என்பதும் இதுவரை தெரியவில்லை.. பாஜக கூட்டணியில் இணைந்த கட்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சில நெட்டிசன்கள், பாஜகவை தவிர அனைத்து கட்சிகளுமே சிறிய கட்சி என்பதுடன் ஒரு எம்எல்ஏகூட எந்த கட்சிக்கும் இல்லை என்று விமர்சித்துள்ளார்கள்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக சேருவது உறுதியாகிவிட்ட நிலையில், பாமக அதிமுகவுடன் சேரப்போவதாக சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை முன்பு இருந்த கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், புதிதாக கமலின் மக்கள் நீதி மய்யமும் சேரப்போவதாக கூறப்படுகிறது.

இந்த முறை தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்படுகிறது.. அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவினர், அமமுக, ஓ பன்னீர்செல்வம் அணி கூட்டணியில் இணைவதால் தென் மாவட்டங்களில் வலுவான வாக்கு சதவீதம் பெற முடியும் என்று நம்புகிறார்கள். அமமுக இணைந்த பின்னர் பாஜக கூட்டணியின் தொகுதி பட்டியல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications