Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபி முதல் தமிழ்நாடு வரை! மோடிக்கு சவால் விடும் 7 இளைஞர்கள்! தாக்குப் பிடிக்குமா பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கு அரசியல் எதிரியாக 7 இளம் தலைவர்கள் உருவெடுத்துள்ளனர்.

இந்த 2024 மக்களவைத் தேர்தல் களத்தில் மோடிக்குச் சவால்விடும் அளவுக்கு ஒரு இளைஞர் பட்டாளம் கிளம்பி இருக்கிறது. இந்தியாவில் பார்த்தால், ராகுல்காந்தி ஒரு அசைக்க முடியாத அரசியல் எதிரியாக மோடிக்கு முன் வளர்ந்து நிற்கிறார்.

lok sabha election 2024 INDIA alliance Akhilesh Yadav Udayanidhi

அவரை ஆரம்பத்தில் பாஜக 'பப்பு' என்று மிக எளிமையாக எடை போட்டுவிட்டது. ஆனால், தனது 'பாரத் ஜோடோ யாத்ரா' மூலம் அவர் இந்தியாவில் பாதி மாநிலங்களைக் கவர் செய்தார். பலரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதற்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது.

ராகுல்காந்தி:

அடுத்து 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா' தொடங்கி இந்தியாவை முழுமையாக வலம்வந்து அவர் முடிக்கவும், தேர்தல் காலம் தொடங்கவும் சரியாக இருந்தது. இந்த யாத்திரையின் மூலம் ராகுலின் செல்வாக்கு கடைக்கோடி மக்களிடமும் போய்ச் சேர்ந்துள்ளது என்றே பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

அதேபோல் இந்த யாத்திரையின் மூலம் அவர் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கான தனித்தனி பிரச்சினைகளைக் கண்டுகொண்டார். ஆகவேதான், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வழக்கத்திற்கு மாறாக இந்தத் தேர்தலில் பேசு பொருளானது.

இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, நாடு முழுவதும் கொண்டு போய் சேர்க்கும் வேலையை ராகுலைவிட, மோடி அதை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அவர் காங் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க விமர்சிக்க அதன் மீது மக்களின் கவனம் மறைமுகமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

அதைக் கொண்டு ஊடகங்கள் 'ஃபேஸ்க்ட் செக்' செய்து காங் தேர்தல் அறிக்கைக்கு ஒரு இலவச வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.

lok sabha election 2024 INDIA alliance Akhilesh Yadav Udayanidhi

இன்றைய தேதியில் மோடிக்குச் சரியான அரசியல் எதிரியாக ராகுல் மாறியிருக்கிறார். இந்திய அளவில் மோடியை எதிர்கொள்ளும் இளம் தலைவராக ராகுல் வளர்ந்துள்ளார்.

ஆனால், இந்தச் செல்வாக்கு ஓட்டுகளாக மாறுமா? மக்கள் அவரை ஆதரிக்கும் அளவுக்கு அவர் வலிமை பெற்று இருக்கிறாரா? என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் சொல்ல வேண்டும்.

இப்போதைக்கு அவர் மோடியுடன் மோதும் தலைவராக இருக்கிறார். மோடி அளவுக்கு வலிமையான தலைவராக இருக்கிறார் என்று சொல்ல முடியாது.

பிரியங்கா காந்தி:

அடுத்தது பிரியங்கா காந்தி. இவர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் ரேபரேலியில் அவரது தாயார் சோனியாவின் இடத்தை நிரப்புவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால், கடைசி நேர மாற்றமாக ரேபரேலியில் ராகுல் களம் காண்பார் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர் பிரியங்கா அமேதியில் போட்டிப் போடுவார் என நினைத்தார்கள். அங்கேயும் அவர் போட்டியிடவில்லை.

அதன் பின்னர் காங் முதல் குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கட்சி முடிவெடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தலில் போட்டியிடாததால் உபி முழுக்க பிரியங்கா காந்தியால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வசதியாக இருந்தது. அவர் ரேபரேலியில் டேரா போட்டு கட்சிக்காரர்களைச் சவுக்கு எடுத்து மிரட்டாத குறையாகத் தேர்தல் பணி செய்து வருகிறார்.

அவரது பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் அளவுக்கு அவர் சக்தி வாய்ந்த தலைவராக வளர்ந்து காங்கிரசுக்கு கை கொடுத்துள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் அவரது பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அப்படிப் பார்த்தால் மோடிக்குச் சவால் விடும் இளம் தலைவர்களில் ஒருவராகப் பிரியங்கா காந்தி இந்தத் தேர்தல் களத்தில் உருவெடுத்துள்ளார்.

lok sabha election 2024 INDIA alliance Akhilesh Yadav Udayanidhi

இரண்டு யாதவர்கள்:

இதே உபியில் மோடிக்கும் யோகிக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளார் இளம் தலைவர் அகிலேஷ் யாதவ். இளம் வயதிலேயே முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்த அவருக்கு அதன் பிறகான நாட்கள் மகிழ்ச்சியாக இல்லை. தோல்விகள், துரோகங்கள் எனப் பல அரசியல் வில்லத்தனங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, இப்போது உபியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார் அகிலேஷ்.

2017 முதல் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருந்து வரும் அகிலேஷ் யாதவுக்கு இந்த மக்களவைத் தேர்தல் வாழ்வா? சாவா என முடிவு செய்யப் போகின்ற தேர்தல். ஆகவே, 'இந்தியா' கூட்டணியை வலிமை பெறச் செய்யவும் அதேநேரத்தில் உபியில் தனது கட்சியைக் காப்பாற்றவும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்த முறை காங்கிரஸ் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் கட்சி கூட்டணி அமைத்தது மிகப்பெரிய சாணக்கிய தனம் என்று பலரும் சொல்கிறார்கள். ஏனென்றால், உபியில் தனித்தனியாகக் கட்சிகள் தேர்தல்களைச் சந்திக்கும் போது பாஜக பலம் அதிகரித்துவிடுகிறது. அதை உணர்ந்த அகிலேஷ், காங் ஒருங்கிணைத்த இந்தியா கூட்டணியில் இணைந்தார்.

இதில் இன்னொரு இலாபம் என்னவென்றால், அண்டை மாநிலமான பீகாரும் இவரது ஆதரவு வட்டத்திற்கு வந்துவிட்டது. உபியில் அகிலேஷ் யாதவ் என்றால் பீகாரில் தேஜஸ்வி யாதவ் என இரண்டு மாநிலங்கள் யாதவ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன.

இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பீகாரைப் பொறுத்தவரை முதல்வர் நிதிஷ்குமார் அரசியல் சூழ்ச்சியால் பழிவாங்கப்பட்டு துணை முதல்வர் பதவியை இழந்த தேஜஸ்வி, அசுர பலத்துடன் இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் வளர்ந்து நிற்கிறார். அவர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் இந்தியா முழுக்க உள்ள மோடி எதிர்ப்பாளர்களுக்கு நம்பிக்கை தரும் விசயமாக மாறியது.

ஆக, பீகாரில் தேஜஸ்வி யாதவ், உபியில் அகிலேஷ் யாதவ் என்ற இரண்டு இளம் தலைவர்கள் மோடிக்கு அரசியல் எதிரியாக இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் கம்பு சுற்றி வருகிறார்கள்.

அபிஷேக் பானர்ஜி:

இதே அளவுக்கு மோடிக்குச் சவால்விடும் சக்தியாக வலம் வருபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஆட்சிக்கு வந்த சில காலங்களிலேயே அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜியை அரசியல் களத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார் மம்தா. உறவு முறையில் மம்தாவுக்கு அபிஷேக் மருமகன் ஆவார்.

lok sabha election 2024 INDIA alliance Akhilesh Yadav Udayanidhi

1987இல் பிறந்த அபிஷேக் எம்பிஏ பட்டதாரி. அத்துடன் மிகமிக இளமையான அரசியல்வாதியாக அறியப்படுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவியில் இருக்கிறார். அதற்கு முன்பாக இளைஞரணிக்கு மாநிலத் தலைவராக இருந்து வந்தார். 2012இல் தாய்லாந்து நாட்டை சேர்ந்த ருஜிரா நருலாவை வை மணந்த இவர் 2014இல் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான். மோடியையும் பாஜகவையும் தனது மாநிலத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் அமைதியடைய மாட்டேன் என்று களத்தில் வேகம் காட்டி வரும் அபிஷேக், பாஜகவை 'ஷேக்' செய்யும் அளவுக்கு அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறார்.

ஆதித்யா தாக்கரே:

கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர் உத்தவ் தாக்ரே. தங்களின் கட்சியையே பறிகொடுத்துவிட்டு, களத்தில் நிராயுத பாணியாக நிற்கிறார் உத்தவ்.

மகாராஷ்டிராவில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சியாக வலம் வந்த சிவசேனா கட்சி முழுமையாக இப்போது இவர் கையில் இல்லை. பல் பிடுங்கிய பாம்பாக மாறி இருந்த அவர், தேர்தல் களத்தில் பாஜகவை அழிக்கும் சக்தியாக உருமாறி இருக்கிறார்.

lok sabha election 2024 INDIA alliance Akhilesh Yadav Udayanidhi

இவரது மகன்தான் ஆதித்யா தாக்கரே. மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கான அமைச்சராக வலம் வந்த இவர், பாஜகவின் சூழ்ச்சியால் பதவியை இழந்தார். அதேபோல சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவராகவும் இருந்தார். இப்போது இந்த இரண்டும் இவரது கையைவிட்டுச் சென்றுவிட்டது.

உடைந்துபோன சிவசேனாவை மட்டுமே அப்பாவும் மகனும் கையில் வைத்துள்ளனர். இந்த நிலை மாறவேண்டும் என்றால், பாஜக மாநில அரசியலிலிருந்து தூக்கி எறியப்பட்ட வேண்டும். மண்ணின் மைந்தர்கள் மாநிலத்தை ஆள வேண்டும். இந்த ஒரே முழக்கத்துடன் மோடி எதிர்ப்பை தீவிரப்படுத்தி, தேர்தலைச் சந்தித்துள்ளார் ஆதித்யா.

அதற்குச் சரியான பலன் கிடைக்கும் என்றும் தேர்தல் முடிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆக, மகாராஷ்டிராவில் மோடியை எதிர்க்கும் இளம் அரசியல் சக்தியாக வளர்ந்து நிற்கிறார் ஆதித்யா தாக்கரே.

உதயநிதி ஸ்டாலின்:

இறுதியாகத் தமிழ்நாட்டுக்கு வருவோம். மோடி எதிர்ப்புக்குப் பேர் எடுத்த மாநிலம் தமிழ்நாடு. கடந்த 2019இல் நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது கூட தமிழ்நாட்டில் அவரது நிழல் கூட இங்கே படவில்லை.

அத்தனை தொகுதியையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. கடந்த தேர்தலில் ஒரே ஒரு செங்கல் வைத்து சாட்டிலைட் சானல்களின் செல்வாக்கை தன்பக்கம் ஈர்த்தவர் உதயநிதி ஸ்டாலின்.

lok sabha election 2024 INDIA alliance Akhilesh Yadav Udayanidhi

இவரது பிரச்சார யுக்தி மிகப்பெரிய அளவுக்குக் கட்சியை வளர்த்தது. வெற்றியைக் கொடுத்தது. அவர் இந்த மக்களவைத் தேர்தலிலும் மோடிக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் மிகத் தீவிரமாக பணியாற்றி இருக்கிறார்.

இந்த முறையும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். அதற்கு சினிமா மற்றும் அரசியல் புகழை அதிகம் கொண்டுள்ள உதயநிதிதான் காரணம் என திமுக தலைமை நம்புகிறது.

அதேபோல் அவர் சனாதனம் எனப் பல சர்ச்சை பேச்சுகளைப் பேசி இந்தியா முழுவதும் 'இந்தியா' கூட்டணிக்கு ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தனது அரசியல் செல்வாக்கையும் இந்திய அளவில் வளர்த்துக் கொண்டுள்ளார்.

ஆக, மோடிக்கு எதிரான இளம் தலைவர்கள் பட்டியலில் உதயநிதியும் ஒரு சக்தி வாய்ந்த தலைவராகத் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+