சென்னையில் தொடங்கியது மோடியின் ரோடு ஷோ.. பிரதமரை பார்த்ததும் மலர்களை வீசி வரவேற்ற பாஜக தொண்டர்கள்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாகப் பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். சென்னை வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் அண்ணாமலை, ஹெச் ராஜா வரவேற்றனர். தொடர்ந்து சென்னையில் நடக்கும் ரோட் ஷோவில் அவர் உற்சாகமாகக் கலந்து கொள்கிறார்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

ஏற்கனவே அவர் தமிழகத்தில் 6 முறை தேர்தல் பிரசாரம் செய்துள்ள நிலையில் இன்று 7 வது முறையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். அதன்படி இன்று மாலை 6.00 மணியளவில் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அண்ணாமலை, ஹெச் ராஜா உள்ளிட்டோர் மோடியை வரவேற்றனர். தொடர்ந்து சென்னை தி நகரில் இருந்து வாகன பேரணியாக சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார் மோடி.
பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வழியாக பாண்டிபஜார் வரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவுக்கு ஓட்டு சேகரிக்கிறார். பாஜகவின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி இன்று ஓட்டு சேகரிக்கிறார்.
பிரதமர் மோடியின் வாகன பேரணியில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியை மலர்தூவி வரவேற்க உள்ளனர். இந்த நிலையில் தான் பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் உயரமான கட்டடங்களில் நின்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதோடு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் இன்று மதியம் முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு நிகழ்ச்சியை முடிக்கும் பிரதமர் மோடி இரவில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு நாளை காலையில் ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார். வேலூர் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
அதன்பிறகு சென்னை வரும் பிரதமர் மோடி விமானத்தில் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து மேட்டுபாளையம் செல்லும் பிரதமர் மோடி நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். பிறகு மீண்டும் கோவை வந்து தனி விமானத்தில் மகாராஷ்டிரா புறப்பட்டு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications