செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
சென்னை: ஒவ்வொரு தேர்தலிலும் தலைநகர் சென்னையில் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாகவே பதிவாகி வருகிறது. இந்த முறையும் தமிழ்நாட்டிலேயே குறைவாக பதிவாகியிருப்பது சென்னை தான் என்றாலும், கடந்த தேர்தலை விட சென்னையில் வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது.
முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல் இன்று நாட்டில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையின் 3 மக்களவை தொகுதிகள்: சென்னையில், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என மொத்தம் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதுதவிர சென்னையைச் சுற்றிலும் உள்ள புறநகர் பகுதிகளை உள்ளடக்கி ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் (தனி) ஆகிய மக்களவைத் தொகுதிகள் உள்ளன. சென்னையில் மட்டும் 3,719 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
சென்னை நகரின் 3 தொகுதிகளில் அதிக வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதி தென் சென்னை. தென் சென்னையைப் பொறுத்தவரை மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். வடசென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர். மத்திய சென்னையில் 13 லட்சத்துக்கு 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 2019 தேர்தலில் வாக்குப்பதிவு: கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது வட சென்னையில் 64.10 சதவீத வாக்குகளே பதிவாகின. தென் சென்னையில் மிகவும் குறைவாக 58 சதவீத வாக்குப்பதிவே நடந்தது. மத்திய சென்னையில் 58.72 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 72.44 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. எனினும், சென்னையின் நிலைமை இதுதான்.
சென்னையில் அதிகரித்த வாக்குப்பதிவு: இந்நிலையில் இன்று நடந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 7 மணி நிலவரத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, வட சென்னையில் 69.26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தென் சென்னையில் 67.82 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், சென்னையை பொறுத்தவரை சராசரி 68 சதவீதமாக உள்ளது. பிற்பகல் 3 மணி வரை சென்னையில் மிகவும் குறைவாகவே வாக்குப் பதிவு நடந்த நிலையில், வெயில் தாழ்ந்ததும் அதிகமானோர் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்துள்ளனர்.
2021லும் வெகு குறைவு: 2021 சட்டசபைத் தேர்தலின்போது சென்னையில் வாக்குப்பதிவு 60 சதவீதத்தைக் கூட தொடவில்லை. 2021 சட்டசபை தேர்தலில் சென்னையில் 59.06 சதவீத வாக்குகள் பதிவாகின. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதம் 73.83 சதவீதம் என்ற போதும் சென்னையில் 59 சதவீதம் தான். பிற மாவட்டங்கள் அனைத்துமே 65 சதவீதத்தைத் தாண்டி வாக்குப் பதிவை கண்டிருந்த நிலையில் தலைநகர் சென்னை மட்டும் 60% ஐ எட்டவில்லை.
சென்னையில் இந்த முறை பரவாயில்லை: படித்தவர்கள் அதிகம் வசிக்கும் நகரமான சென்னையில் ஒவ்வொரு முறையும் ஓட்டுப்பதிவு குறைவாகவே இருந்து வருகிறது. வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மீதான ஓவ்வாமையே சென்னையில் வாக்குப்பதிவு குறைவாக நடப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கிராமப்புறப் பகுதிகள், பாமர மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூட அதிக வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், சென்னை எப்போதும் வாக்குப்பதிவில் சோடை போவது அனைவருக்கும் வருத்தம் தான். ஆனால், இந்த முறை, கடைசியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சராசரிக்கு அருகில் வந்துள்ளது சென்னை.












Click it and Unblock the Notifications