பாஜக- பாமக கூட்டணி.. காலையிலேயே அவசர அவசரமாக கையெழுத்தானது ஏன்? யார் கொடுத்த அழுத்தம்?
சென்னை: பாஜக- பாமக கூட்டணி ஒப்பந்தம் அவசர அவசரமாக காலையிலேயே கையெழுத்தாக வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவை தேர்தல் தேதி அறிவித்ததும் எல்லா கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாகியுள்ளன. அந்த வகையில் முதலில் கட்சிகள் செய்ய வேண்டியது கூட்டணி ஒப்பந்தம், தொகுதி பங்கீடு, பிறகு வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் இவைதான்!

அந்த வகையில் கூட்டணி ஒப்பந்தத்தை திமுக நேற்றுடன் நிறைவு செய்துவிட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தமிழகம், புதுவையில் 19 இடங்களை ஒதுக்கிய திமுக, 21 இடங்களில் நேரிடையாக போட்டியிடுகிறது.
அது போல் அதிமுக கூட்டணி என பார்த்தால் அங்கு சிறிய சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளன. இதனால் தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. எனவே பாமக, அதிமுக கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறோம் என நேற்று பாமக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட அதிர்ச்சி, இன்று காலையிலேயே பாஜக- பாமக கூட்டணி கையெழுத்தாகியுள்ளது. பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. ஆனால் மாநிலங்களவை குறித்து எந்த தகவலும் இல்லை.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில் பாஜக தேசிய கட்சி, கூட்டணி கட்சிக்கு ராஜ்யசபா எம்பி தருகிறார்கள் என தெரிந்தால் இதே அணுகுமுறையை மற்ற கூட்டணி கட்சியினரும் கேட்பர். இதனால் பாஜகவுக்கு நெருக்கடிகள் எழக் கூடும். எனவே அதை ஆவணங்களாக பதிவு செய்ய பாஜக விரும்பவில்லை.
மேலும் இந்த ஒப்பந்த கையெழுத்தின் போது பாஜகவை சேர்ந்த மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமல்லாமல் தேசிய அளவிலான தலைவர்களும் இடம்பெற்றிருந்தனர். எனவே பாமகவுக்கு ஏதாவது வாய்மொழி உத்தரவாதம் கிடைத்திருக்கும் என்றே தெரிகிறது என்றனர்.
பொதுவாக கூட்டணி ஒப்பந்தம் என்பது அந்தந்த நாளில் ராகு காலம், எமகண்டம் பார்த்து நல்ல நேரத்தில் காலையிலோ அல்லது மாலையிலோ கையெழுத்தாகும். ஆனால் பாமக - பாஜக கூட்டணியை பொருத்தமட்டில் காலையிலேயே கையெழுத்தாகியுள்ளது.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் அந்த காலங்களில் பாமக கூட்டணி என்றாலே அது பெரிய விஷயமாக இருக்கும். எல்லா ஊடகங்களின் கவனமும் பாமக மீது இருக்கும். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தை கூட பாமகதான் நிர்ணயிக்கும். ஆனால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதே அவர்கள் நெருக்கடியான சூழலில்தான் செய்திருக்கிறார்கள்.
சேலத்தில் நடக்கும் பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்தில் பாமக தலைவர்கள் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பாஜக தலைவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பேரில்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கையெழுத்தும் அவசர அவசரமாக பெறப்பட்டுவிட்டது. அந்த அளவுக்கு பாமக மீது நிர்பந்தம் இருக்கிறது.
ஒரு அழுத்தம் இல்லால் பாமக இந்த கூட்டணியை இறுதி செய்திருக்க மாட்டார்கள். வேட்புமனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்னர் வரை கூட எந்த கூட்டணிக்கு போனால் பாமகவுக்கு நன்மை என்பதை யோசித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த முறை பாமகவுக்கு ஒரு அழுத்தம் என்பது கூடுதலாக உள்ளது. நிறைய உத்தரவாதங்களும் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று கூட்டணி பேச்சுவார்த்தையில் கூட பாமக நிர்வாகிகள் யாரும் உற்சாகமாக இல்லை. இன்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் வரவில்லை, அன்புமணி மட்டுமே வந்திருந்தார். கூட்டணி ஒப்பந்தங்கள் சென்னையில்தான் நடக்கும். ஆனால் மாறாக இன்று தைலாபுரத்தில் நடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரு முறை தமிழகம் வந்த போதிலும் பெரிய அளவிலான கூட்டணி தமிழகத்தில் அமையவில்லை என்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. முதல் முறையாக என் மண் என் மக்கள் யாத்திரைக்கு பிரதமர் வரும் போதே கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையில் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு தமிழக பாஜகவுக்கு இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் எத்தனை தொகுதி, எந்த தொகுதி போன்றவை எல்லாம் அறிவிக்கப்படவில்லை. பெரிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பமாக இருக்கிறது. இவ்வாறு அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications