சீமான் ‘விரதத்தை’ கலைக்க களமிறங்கிய டெல்லிவாலா.. அதிமுக கூட்டணிக்குள் தள்ளிவிட பகீரத முயற்சி!
சென்னை: லோக்சபா தேர்தலில் தனித்துதான் போட்டி என அறிவித்து வேட்பாளர்களையும் முடிவு செய்துவிட்ட நாம் தமிழர் கட்சியை அண்ணா திமுக கூட்டணியில் எப்படியாவது இணைத்துவிட "டெல்லி வாலாக்கள்" சிலர் தீவிரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாம் தமிழர் கட்சி தொடங்கி பல தேர்தல்களை தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதுவரை சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் ஒரு இடத்தை கூட அந்த கட்சி பெறவில்லை. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதுவரை தேர்தலில் வெற்றிபெற்றது இல்லை.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு: ஆனால் நாம் தமிழர் கட்சி 2016-ம் ஆண்டு 1.10% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2021 சட்டசபை தேர்தலில் 6.72% வாக்குகளை பெற்று வளர்ச்சி பெற்றிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டு அரசியலில் சீமானின் நாம் தமிழர் கட்சி முக்கியமான பங்கு வகிக்க தொடங்கி இருக்கிறது.
சீமான் தனித்து போட்டி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் தனித்தே போட்டி என அறிவித்திருக்கிறார் சீமான். தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஓரளவு சீமான் முடிவு செய்துவிட்டார். இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியும் வருகிறார். இதனிடையே சீமானின் தனித்துப் போட்டி என்கிற நிலைப்பாடு மாறுமா? மாறாதா? என்கிற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிமுகவின் தீவிர முயற்சி: அண்மையில் பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, தமது தலைமையில் வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிக்கிறது. அதிமுகவின் முதன்மையான வாய்ப்புகளில் ஒன்றாக சீமானின் நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது. இது தொடர்பாக சீமான் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியுடன் நேரில் சந்தித்து பேசும் போது கூட்டணி குறித்து பேசப்பட்டது. ஆனால் அதுசரிவராது என தெரிவித்திருக்கிறோம் என விவரித்திருந்தார். இருந்தாலும் சீமானை அதிமுக அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை என முடிவு செய்துள்ளதாம். எப்படியாவது சீமானை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை அதிமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். தற்போது டெல்லிவாலா ஒருவரை இதற்காகவே அதிமுக களமிறக்கி இருக்கிறதாம். சீமானின் தனித்து போட்டி விரதம் கலையுமா? அதிமுக கூட்டணியில் சீமான் இடம் பெறுவாரா? என்கிற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications