ஸ்டாலின் சொன்ன தொகுதி பங்கீடு இது! இனி யாரும் மூச்சே விடமுடியாதே.. காங்கிரஸ், இடதுசாரிகள் கப்சிப்!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான "இந்தியா" கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் குழப்பத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்வைத்த தொகுதி பங்கீடு பார்முலாவால் ஒட்டுமொத்தமாக அத்தனை கூட்டணி கட்சிகளையும் வாயே திறக்க முடியாத அளவுக்கு கச்சிதமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த உருவாக்கப்பட்டதுதான் "இந்தியா" கூட்டணி. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி என பல மாநில கட்சிகளை உள்ளடக்கிய "இந்தியா" கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப இடங்களைத்தான் ஒதுக்க முன்வந்துள்ளன. இதனை எப்படி ஏற்பது என பெரும் அதிர்ச்சியில் காங்கிரஸ் இருக்கிறது.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் மட்டும் காங்கிரஸுக்கு கணிசமான இடங்களைக் கொடுக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா முன்வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸுக்கு ஆறுதல் தரும் வகையில் திமுக தலைமை ஒரு தொகுதி பங்கீடு பார்முலாவை முன்வைத்துள்ளதாம்.
தமிழ்நாடு: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிட்டு 20 தொகுதிகளையும் கைப்பற்றியது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8, இடதுசாரிகள் 4 தொகுதிகளில் போட்டியிட்டு 4, விசிக 2-ல் போட்டியிட்டு 2, முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 1 இடத்தில் போட்டியிட்டு 1-ல் வென்றன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38-ல் திமுக கூட்டணி வென்றது. திமுக கூட்டணி 2,27,89,020 வாக்குகளை அள்ளியது. தற்போதும் இதே தொகுதி பங்கீட்டு பார்முலாவைத்தான் தமிழ்நாடு, புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளுக்குமாக திமுக தலைமை முன்வைக்கிறதாம்.
திமுகவின் உத்தேச தொகுதி பங்கீடு:
திமுக 22
காங்கிரஸ் 9
இடதுசாரிகள் 4
விசிக 2
முஸ்லிம் லீக் 1
மதிமுக 1
கொமதேக 1
காங்கிரஸ் மேலிடம் நெருக்கடி கொடுத்து புதுச்சேரி தொகுதியை வாங்கினால் திமுக 21, காங்கிரஸ் 10 என மாறும்.
கமல்ஹாசனின் மநீம?: கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம், திமுக கூட்டணியில் இணைந்தால் திமுகவின் 21-ல் ஒரு தொகுதி அக்கட்சி ஒதுக்கப்பட திமுக 20 தொகுதிகளில் களம் காணும் என்பதுதான் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்திருக்கும் உத்தேச திமுக கூட்டணி பார்முலாவாம்.
பாமக உள்ளே வந்தால்? : அதே நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் திமுக முன்வைத்துள்ள இந்த உத்தேச தொகுதி பார்முலாவில் நிறைய மாற்றங்கள் வரக் கூடும். காங்கிரஸுக்கு 4 முதல் 5 இடங்கள், இடதுசாரிகளுக்கு 2 முதல் 3 இடங்கள் என குறைத்து பாமகவுக்கு அதிகபட்சம் 7 தொகுதிகள் வரை திமுக தலைமை ஒதுக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் அத்தனை கூட்டணி கட்சிகளும் இருப்பதால் விரைவாகவே திமுக கூட்டணி தொகுதி பங்கீடு முடிவடைந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications