கவனித்தீர்களா.. திமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரன் தூக்கி போட்ட "கல்.." இதெல்லாம் நடக்குற கதையா?
சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு செல்வதாக டிடிவி தினகரன் கூறியது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் பிக்பாஸில் கூறுவது தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை பேச தொடங்கிவிட்டன.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என சொன்னாலும் சொன்னார்.. அதை வைத்து தற்போது அரசியல் களம் நகர்ந்து வருகிறது. அதிமுகவில் பாஜக கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உறுதி செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஏன் பார்க்கவில்லை என கேட்டதற்கு தனிப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்த அவரை போய் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனால் அதிமுக- பாஜக கூட்டணி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் டிடிவி தினகரன் அதிமுகவின் மெகா கூட்டணியில் இணைவது குறித்து இசைவு தெரிவித்தது போல் பேசியிருந்தார். இதற்கு எடப்பாடி பதிலளிக்கையில் அதிமுக கூட்டணி அமமுக ஒரு சதவீதம் கூட இருக்க வாய்ப்பே இல்லை என்றார். இந்த நிலையில் ராயப்பேட்டையில் செய்தியாளர்களை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவுடன் அரைக்கால் சதவீதம் கூட கூட்டணி இல்லை.

அதிமுகவுக்கு தலைமை
அதிமுகவுக்கு தலைமையே யாரென தெரியவில்லை. மேலும் நான் எடப்பாடியுடன் கூட்டணி வைப்பேன் என எங்கும் சொன்னதில்லை. கூட்டணிக்கு பாஜக, காங்கிரஸ் என இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளது. அதில் ஒன்றோடுதான் கூட்டணி வைக்க முடியும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் கூட்டணியில் இருப்பதுதான் சரியானது. இல்லாவிட்டால் தனித்து போட்டியிடவும் தயார் என தினகரன் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸுடன் கூட்டணி
கூட்டணி குறித்த பேச்சில் காங்கிரஸுடன் அல்லது பாஜகவுடன் கூட்டணி என தினகரன் கூறுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை உள்ளது. அந்த வகையில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் வெவ்வேறு கொள்கை உள்ளது. இரண்டும் வெவ்வேறு எக்ஸ்ட்ரீம். இப்படி இருக்கும் போது இரு தேசிய கட்சிகளில் இரண்டில் ஒன்றுடன் கூட்டணி வைப்பேன் என சொல்வது எப்படி? அப்படியென்றால் அமமுகவின் கொள்கை என்ன என்கிற கேள்வி எழுகிறது.

வழக்குகள் என்னவாகும்
தினகரன் மீது ஏகப்பட்ட வழக்குகள் ஸ்ட்ராங்காக இருக்கின்றன. இவை எந்த நேரத்திலும் தோண்டி எடுக்கப்படும் என்பதால் தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது. வழக்குகளை சமாளிக்க பாஜகவுடன் கூட்டணி வைப்பதே பாதுகாப்பானது என அமமுக கருதுவதாகவும் கூறப்படுகிறது. சரி தினகரனின் வாதத்தின் அடிப்படையில் அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறார் என்றால் அவர் மீதான வழக்குகள் என்னவாகும், அவரே அந்த வழக்குகளை எதிர்கொள்ள தயாராகிவிட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. இத்தனை நாட்களாக காங்கிரஸ் பெயரை டிடிவி தினகரன் சொன்னதே இல்லை. ஆனால் தற்போது சொல்லியுள்ளது எதற்காக?

திமுக கூட்டணியில் காங்கிரஸ்
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்களிடம் கேட்ட போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. இரு எதிரெதிர் கட்சியில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி என எந்த அரசியல்வாதியாவது சொல்வார்களா? அப்படியென்றால் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க தினகரன் முயற்சிக்கிறாரா? திமுகவை எதிர்ப்பதே தனது லட்சியம் என கூறிவிட்டு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுடன் கூட்டணி என சொல்வது முறையா? பாஜகவுடன் கூட்டணி என சொல்லி அதிமுக- பாஜக கூட்டணியை உடைக்க பார்க்கிறாரா? அவருடைய நிலைப்பாடு புரியவில்லை.

அணில் போல் உதவும் அமமுக
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்ய அணிலை போல் அமமுக உதவும் என தினகரன் தெரிவித்துள்ளார். அப்படியெனில் இவர் எந்த கட்சியின் பிரதமர் வேட்பாளரை ஆதரிப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு கட்சித் தலைவர் என்பவர் ஒரு நேரத்தில் ஒரு நிலைப்பாட்டைத்தான் எடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இரு துருவங்களான இரு கட்சிகளில் ஒன்று இதனுடன் இல்லாட்டி அதனுடன் கூட்டணி என சொல்வது புரியாத புதிராக இருக்கிறது. மேலும் தம் எதிர்க்கட்சியுடன் கூட்டணி என அன்று அறிவித்துவிட்டு இன்று நம் கட்சி கூட்டணிக்கு வருகிறாரே என இரு கட்சி தலைமைக்கும் நெருடலை தரும். என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications