பெங்களூருக்கும் அழைக்கலை... டெல்லிக்கும் கூப்பிடலை.. நட்ட நடு சென்டரில் தேமுதிக, அமமுக!
சென்னை: லோக்சபா தேர்தல் வியூகங்களுக்காக தேசிய அரசியல் அனல் பறந்து கொண்டிருக்கிறது. பெங்களூர், டெல்லியில் அத்தனை அரசியல் கட்சிகளும் ஆளுக்கு ஒரு முகாமில் இணைந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கின்றன. ஆனால் தமிழ்நாட்டின் தேமுதிக, அமமுக, மநீம ஆகிய கட்சிகளை எந்த ஒரு கூட்டணியுமே அழைக்காமல் நட்டாற்றில் விட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
டெல்லியில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கிறது. அத்துடன் வட தமிழ்நாட்டில் கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவும் பங்கேற்கிறது. இந்த கட்சிகள் இல்லாமல் சொற்ப வாக்குகளை கூட பெற முடியாத இமகமுக, இஜக, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கும் கூட டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் பெங்களூரு எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக பிரதான கட்சியாக பங்கேற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தேமுதிக: தமிழ்நாட்டின் மொத்தம் 12 அரசியல் கட்சிகள் டெல்லி, பெங்களூரு கூட்டங்களில் பங்கேற்றுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் திமுகவையும் ஒரு காலத்தில் மிரளவைத்து பிரதான திர்க்கட்சியாக இருந்த தேமுதிகவை ஒரு அணி கூட்டத்துக்கும் கூப்பிடவில்லை. இத்தனைக்கும் பாஜகவுடன் நட்பு பாராட்டிக் கொண்டே இருக்கக் கூடிய கட்சியாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டது தேமுதிக.
அமமுக: அதேபோல உண்மையான அதிமுக நாங்கள்தான் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு பத்தோடு பதினொன்றாக போய்விட்ட, எந்த நேரத்திலும் பாஜக அணியில் இணையக் கூடிய வாய்ப்பிருக்கும் அமமுகவையும் டெல்லி கூட்டத்துக்கு பாஜக அழைக்கவில்லை.
மநீம: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவை ஓவர் டேக் செய்து காங்கிரஸுடன் நெருக்கம் காட்டியது. காங்கிரஸ் கூட்டணியில்தான் மநீம இடம்பெறும் என்றெல்லாம் உறுதியாக கூறப்பட்டது. ராகுல் காந்தியின் யாத்திரையில் கூட கமல்ஹாசன் கலந்து கொண்டார். ராகுல் காந்தியை தனியாக பேட்டி எடுத்து தலைப்புச் செய்தியாக கூட கமல்ஹாசன் இடம்பிடித்தார். ஆனால் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு மநீமவை கூப்பிடத்தான் யாருக்கும் மனமில்லை போல.. இதனால் தேமுதிக, அமமுக, மநீம ஆகிய கட்சிகள் வழக்கம் போல நட்ட நடு சென்டரில் நின்று திருதிருவென பரிதாபமாக விழிக்கிறது!












Click it and Unblock the Notifications