திமுக அணியில் பாமக இணைந்தாலும் விசிக வெளியேறாது? இருக்கவே இருக்கு 2001-ல் கருணாநிதி சொன்ன டயலாக்?
திமுக அணியில் தொடர்ந்து நீடிப்பது என்கிற நிலைப்பாட்டை திருமாவளவன் எடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.
சென்னை: திமுக அணியில் பாமக இணைந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து அதே கூட்டணியில்தான் நீடிக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். 2001-ம் ஆண்டு கூட்டணி தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்த ஒரு வசனத்தை முன்வைத்தே திமுக கூட்டணியில் ஒரு பக்கம் பாமகவும் இன்னொரு பக்கம் விசிகவும் இடம்பெறக் கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கு இல்லை எனவும் கூறப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக, மதிமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திமுக தலைமையிலான இந்த கூட்டணி தொடர்ந்து வலிமையாக ஒருங்கிணைந்து தேர்தல்களை எதிர்கொண்டு வாகை சூடி வருகிறது. அண்மையில் இந்த கூட்டணியில் சிறு சிறு சலசலப்புகளும் வெளிப்பட தொடங்கின.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்துவிட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலினும் வேல்முருகன் பெயரையோ தவாக பெயரையோ குறிப்பிடவும் இல்லை. மேலும் வேல்முருகன், திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக சாடியிருந்தார்.
இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு போலீஸ் என்ன பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கிறதா? பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இருக்காது என எதிரி கட்சி போல சீறியிருந்தார். முன்னதாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்னார் திருமாவளவன். தவாக வேல்முருகன், விசிக திருமாவளவனின் இந்த சலசலப்புகளுக்கு ஒற்றை காரணமாக சொல்லப்பட்டது பாமகதான். 2024 லோக்சபா தேர்தலி பாமக, திமுக அணியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது; திமுக கூட்டணியில் பாமக இடம்பெறக் கூடும் என்பதுதான் இருவரது சீற்றத்துக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. இதன்பின்னர் டிவி சேனல் பேட்டியை முன்வைத்து திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுடன் விசிக மோதியது.
இதனால் திமுக அணியில் சலசலப்பா என கேள்விகள் எழ, கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். வேல்முருகன், திருமாவளவனும் இந்த சந்திப்பில் இடம்பெற்றனர். இதன்பின்னர் திருமாவளவன் நிலைப்பாடுகளில் தற்போது திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திடீரென சந்தித்து, தமது டிவி பேட்டிக்காக வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்.
இப்பிரச்சனைகள் தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய திருமாவளவன், திமுக கூட்டணியில்தான் இருப்பேன், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக எதிர்ப்பு சக்திகள் இணைந்த கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியை செய்யவேண்டும். அந்த ஒருங்கிணைக்கும் பணியை எங்களால் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்ற முறையில் ஸ்டாலினால் செய்ய முடியும். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம் என கூறியிருக்கிறார்.
மேலும் பாமக குறித்து இந்த பேட்டியில் பேசிய திருமாவளவன், பாஜக- அதிமுக பக்கம்தான் அக்கட்சி போகும். திமுகவுடன் பாமக உறவாக இருப்பதால் எங்களுக்கு பீதி இல்லை. பாமகவின் பேரம் பேசுகிற உத்தி இது. அதிமுக பாஜக பக்கம் போகும். நாங்கல் பாஜக இருப்பதால் அதிமுக பக்கம் போகவே வாய்ப்பில்லை என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
அதேநேரத்தில் திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றால் விசிக வெளியேறும் என அழுத்தம் திருத்தமாக முன்னரைப் போல திருமாவளவன் கூறவில்லை. இது தொடர்பாக மூத்த அரசியல் பார்வையாளர்களிடம் பேசிய போது, 2001-ல் திமுக கூட்டணியில் பாஜக இருந்தது. அந்த கூட்டணியில் விசிகவும் இருந்தது. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்ன ஒரு பதில் இப்போதும் அற்புதமாக பொருந்தும். அதாவது விசிக, திமுகவுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளது. திமுகதான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்றார். அதே டயலாக் 2024 லோக்சபா தேர்தலின் போது, விசிக, திமுகவுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளது; திமுகதான் பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது என உருமாறி எதிரொலித்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications