நல்லா பாருங்க.. இந்த கோம்பை ஆடு 65,000 ரூபாய்.. காரணம் கேட்டால் அசந்துருவீங்க.. கோடிகளில் வர்த்தகம்
சென்னை: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. தூத்துக்குடி, விழுப்புரம்,. திருநெல்வேலி என தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்தைகளில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆடுகள் விற்பனையாகி கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலு சேர்த்துள்ளன. பண்டிகை காலத் தேவையைப் பூர்த்தி செய்ய, பொதுமக்கள் அதிக விலையிலும் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். இதில் அனைவரையும் கவர்ந்தது கோம்பை, குறும்பை ஆடுகள்தானாம்.
இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் வருகின்ற மே 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தியாகத் திருநாளில் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்குவதில் இஸ்லாமிய பெருமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற வாரச் சந்தைகளில் ஆடு விற்பனை கடந்த சில நாட்களாகவே உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தென் மாவட்டங்களின் முக்கிய வணிக மையங்களான எட்டயபுரம், செஞ்சி மற்றும் மேலப்பாளையம் ஆகிய சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று, கோடிக்கணக்கான ரூபாய் பணப் புழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆடுகள் விலை - பக்ரீத் பண்டிகை
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச் சந்தை, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நடைபெறும். இங்கு திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோவை எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் திரள்வது வழக்கம்.
வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இந்த வார சந்தை விழாக்கோலம் பூண்டிருந்தது. பொட்டு, மயிலை, நாடு, செம்மறி எனப் பல ரகங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. சுமார் 5 மணி நேர சந்தையில் மட்டும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
குறிப்பாக, 10 கிலோ முதல் 35 கிலோ வரையிலான ஆடுகள் 12 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் உற்சாகமாக ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
ஆட்டு சந்தையால் பெருகிய வர்த்தகம்
இதேபோல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற சிறப்பு சந்தையும் பெரும் வர்த்தகத்தை பெற்றிருக்கிறதாம்.. வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் இந்தச் சந்தைக்குத் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் பெங்களூருவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்திருந்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்தச் சிறப்பு சந்தையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இங்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. இதன் மூலம் ஒரே நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது, ஆட்டு வளர்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஈர்த்த கோம்பை, குறும்பை
திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாளையம் சந்தையிலும் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அதிகாலை முதலே சந்தையில் திரண்ட மக்கள், தரமான செம்மறியாடுகளைத் தேடித் தேடி வாங்கிச் சென்றனர். மேலப்பாளையம் சந்தையில் இந்த வாரம் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான ஆடுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
"கோம்பை" என அழைக்கப்பட்ட ஆடு 65 ஆயிரம் ரூபாய்க்கும், "குறும்பை'" என அழைக்கப்பட்ட ஆடு 48 ஆயிரம் ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. திடகாத்திரமாக காணப்படுவதால்தான், இந்த ஆடுகளுக்கு இவ்வளவு மவுசு என்கிறார்கள்.. அதனால் இந்த ஆடுகளை சந்தைக்கு வந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், போட்டோக்களை எடுத்துக்கொண்டனர்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம்
கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஆடுகளின் விலை சற்று அதிகமாக இருந்தாலும், பண்டிகை காலத்திற்காகத் தரமான ஆடுகளை வாங்குவதில் மக்கள் சமரசம் செய்துகொள்ளவில்லையாம்..
பண்டிகை நாள் நெருங்குவதால், வரும் நாட்களில் இந்த சந்தைகளில் ஆடுகளின் விற்பனை மற்றும் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தச் சந்தைகள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் இந்த சந்தைகள் மூலம் உயர்ந்துள்ளது என்பதை இது காட்டுகிறது...!!












Click it and Unblock the Notifications