கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. டக்குனு "ரூட்டை" மாற்றும் மக்கள்.. சமையலுக்கு புதிய மாற்று.. இனி நிம்மதி
சென்னை: நாளுக்கு நாள், எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரும்நிலையில், மாற்று வழியை கையில் எடுக்க துவங்கிவிட்டனர் மக்கள்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் துறைமுகத்தில் எல்என்ஜி எனப்படும் திரவ நிலை எரிவாயு முனையத்தை அமைத்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்வதற்காக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் வரியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது

இயற்கை எரிவாயு: அதாவது, வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் எரிவாயு, இந்த முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு பிறகு, இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் எரிவாயு எடுத்துச்செல்வதற்காக குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்வதற்காகவே, 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது..
வசதிகள்: அந்தவகையில், சென்னையில் முதல்முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே நாகப்பட்டினம், காரைக்கால், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ள நிலையில், இப்போது சென்னையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதல்முறையாக அண்ணா நகரில் உள்ள மெட்ரோ சோன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் குழாய் மூலமாக வீட்டு உபயோக இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த எரிவாயு பயன்பாட்டை அளவிடுவதற்காகவே, தனி மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான், நுகர்வோருக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கரண்ட் பில் கணக்கெடுப்பதைபோல, 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆன்லைனில் இதற்கான கட்டணத்தை செலுத்தலாம்.. அதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாநகர்: வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை பெற 7,090 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் 6,500 ரூபாய் திரும்ப பெறும் கட்டணம் என்று ரோடன்ட் கேஸ் அதிகாரிகள் சொல்கிறார்கள்.. அண்ணாநகர் ஏரியா முடிந்தபிறகு, அடுத்தகட்டமாக அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் மின்சார அடுப்பிற்கு மாற துவங்கிவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எல்பிஜி கேஸ் சிலிண்டரின் உபயோகத்தை விட, மின்சார அடுப்பில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு யூனிட் வரை மட்டுமே மின்சாரம் தேவைப்படுவதாக பொதுமக்கள் சொல்கிறார்கள்.
ஆனாலும், இப்போதுவரை இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் உணவு சமைக்க மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மர அடுப்பினை பயன்படுத்தி வருவதாக அந்த ஆய்வில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக உருவாகும் காற்று மாசுபாட்டினால் வருடத்துக்கு 6 லட்சம் பேர் மரணமடைவதாகவும், மின்சார அடுப்பு ஓரளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிலிண்டர் விலை: நாளுக்கு நாள் சமையல் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரும்நிலையில், அதை சமாளிக்க முடியாமல், கரண்ட் அடுப்பு பக்கமும், இயற்கை எரிவாயு பக்கமும், மக்களின் கவனம் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications