அமெரிக்காவால் சென்னைக்கு வந்த பிரச்சனை..அன்றாட சோத்துக்கே அல்லல்படும் ஆட்டோ ஓட்டுனர்கள்! என்னாச்சு?
சென்னை: மழை விட்டாலும் தூறல் விடவில்லை என்பது போல், இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் சற்று தணிந்திருந்தாலும், ஆரம்பத்தில் எண்ணெய் விநியோகத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாக எல்.பி.ஜி காஸ் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடுமையான கேஸ் தட்டுப்பாடு காரணமாக, எரிவாயு நிரப்பும் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி இருப்பதால், அவர்களின் அன்றாட வருமானமே பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில், பொதுப் போக்குவரத்து தான் முக்கியமான ஆதாரம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சென்னையில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்ஸிகள் உள்ளன.

அவை பெரும்பாலும், எல்.பி.ஜி மற்றும் சி.என்.ஜி எரிவாயுவை பயன்படுத்தி இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்ததால், பலர் தங்கள் வாகனங்களை எல்.பி.ஜி எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியுள்ளனர்.
கேஸ் தட்டுப்பாடு
இதனால் எரிபொருள் செலவு குறையும் என்ற நம்பிக்கையில் இந்த மாற்றத்தை ஓட்டுநர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு அவர்களை புதிய சிக்கலில் தள்ளியுள்ளது. இந்த தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஏற்பட்ட சர்வதேச எரிவாயு விநியோக பாதிப்பு கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு அளவு குறைந்ததால், அதன் தாக்கம் உள்ளூர் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
மூடப்பட்ட பங்குகள்
இதனால் சென்னையின் பல பகுதிகளில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையங்களில் கேஸ் கிடைக்காமல் மூடப்பட்டிருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. சென்னையின் வடபழனி, எழும்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சில எரிவாயு பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திறந்திருக்கும் சில பங்குகளில் கூட்டம் அதிகரித்து, ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஓட்டுநர்கள் கவலை
குறிப்பாக மீனம்பாக்கம் மற்றும் கீழ்ப்பாக்கம் பகுதிகளில் உள்ள பங்குகளில் காஸ் நிரப்புவதற்காக 3 கிலோமீட்டர் வரை ஆட்டோக்கள் வரிசையாக நின்று காத்திருந்ததாக ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் காஸ் நிரப்புவதற்கே 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாடகைக்கு ஆட்டோ
வழக்கமாக ஒரு கிலோ எல்.பி.ஜி காஸில் சுமார் 20 கிலோமீட்டர் வரை ஆட்டோ ஓடும். ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோலில் 8 கிலோமீட்டர் வரை மட்டுமே செல்லும் என்பதால், பெரும்பாலான ஓட்டுநர்கள் எல்.பி.ஜி மீது தான் நம்பிக்கை வைத்து தொழில் செய்து வந்தனர். தற்போது காஸ் நிரப்புவதற்கே பல மணி நேரம் செலவாகுவதால், அவர்கள் தினசரி செல்லும் சவாரி எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டும் ஓட்டுநர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
அவர்கள் தினசரி வாடகை தொகையை கட்ட வேண்டிய நிலை இருப்பதால், வருமானம் குறைந்தால் நேரடியாக கடன் சுமை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பலர் காலை முதலே காஸ் பங்குகளுக்கு சென்று வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை நீடித்தால் பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏனெனில் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி சேவைகள் குறைந்தால், நகரப் போக்குவரத்து முறையும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
எல்.பி.ஜி காஸ் தட்டுப்பாடு
குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோர், மாணவர்கள் மற்றும் தினசரி பயணிகள் கூடுதல் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே, எல்.பி.ஜி காஸ் தட்டுப்பாடு நீடிக்காமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பங்குகளில் தொடர்ந்து காஸ் கிடைக்கும் வகையில் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications