விஜயை பொருட்டாக கூட மதிக்காத ஸ்டாலின், உதயநிதி.. அங்கிள் விமர்சனத்தை கண்டுகொள்ளாத திமுக.. ட்விஸ்ட்
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்த "ஸ்டாலின் அங்கிள் கருத்து குறித்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக கிண்டல் செய்து பேசினார். அவரின் பேச்சு.. எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும், ஸ்டாலினின் விமர்சனத்தை பெற வேண்டும் என்று திட்டமிட்டு பேசப்பட்டது போல இருந்தது.

அங்கிள் விஜய் - ஸ்டாலின் விமர்சனம்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பாஜகவையும், திமுகவையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். தங்கள் கட்சியின் ஒரே கொள்கை ரீதியான எதிரி பாஜகதான் என்றும், அரசியல் ரீதியான எதிரி திமுகதான் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், டீலிங் போட்டு கூட்டணி அமைக்கும் கட்சி தங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தங்கள் கட்சி உலக மகா ஊழல் கட்சியும் இல்லை, பாஜகவுடன் மறைமுக டீலிங் செய்யும் பாசிச கட்சியும் இல்லை என விஜய் சுட்டிக் காட்டினார். தவெக முன்னெடுக்கும் அரசியல் உண்மை, உணர்வுபூர்வம், மற்றும் நல்ல அரசியல் மட்டுமே என்றும், நல்லது மட்டுமே செய்யும் அரசியல் என்றும் அவர் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்றும், வேறு போட்டி இருக்காது என்றும் விஜய் சவால் விட்டார். திமுக கூட்டணி அமைத்துத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதாகவும் அவர் விமர்சித்தார். எம்ஜிஆர் இருக்கும் வரை யாராலும் முதல்வராக ஆக முடியவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகவும், ஒரு ரெய்டு வந்ததும் உடனடியாக டெல்லிக்குச் சென்று ரகசியச் சந்திப்புகளை நடத்துவதாகவும் விஜய் குற்றம்சாட்டினார். முதல்வர் ஸ்டாலினை "ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங் அங்கிள்" என விமர்சித்தார். "மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்" என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
விஜயை கண்டுகொள்ளாத ஸ்டாலின்
இதுவரை, முதல்வர் அல்லது உதயநிதி ஸ்டாலின் விஜயின் இந்த பேச்சு குறித்து எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இரு தலைவர்களும் இது குறித்து எந்த விவாதத்திற்கும் பதிலளிக்காமல் தங்கள் அரசியல் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். பொதுவாக திமுக அரசியலில் தங்களை விட சிறியவர்களை பற்றி பேசாது.
சீமான் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தாலும், சீமான் பெயரை ஸ்டாலின் பயன்படுத்தியதே இல்லை. சீமான் தந்தை இறந்த போதுதான் முதல்முறையாக ஸ்டாலின் சீமான் பெயரை குறிப்பிட்டார். அதன்படியே விஜயின் பெயரை குறிப்பிடாமல் ஸ்டாலின் தவிர்த்து வருகிறார்.
மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாகக் கேலி செய்த போதிலும், ஸ்டாலின் இதுவரை விஜய் குறித்துப் பேசியதில்லை. விஜயை ஒரு பொருட்டாக கூட ஸ்டாலின் பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே விஜயின் பேச்சு, எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும் அல்லது விமர்சனத்தைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் அமைந்திருந்தது.
"அங்கிள்" என்று சொன்னால் ஸ்டாலின் கோபப்பட்டு விமர்சிப்பாரா, அல்லது தனக்கு பதிலடி கொடுத்து தன்னை முக்கியத்துவம் வாய்ந்தவராகப் பார்க்க வைப்பாரா என்ற நோக்கத்துடன் விஜய் பேசியதாகத் தோன்றியது. ஆனால், விஜய் கருத்துக்கு பதிலடி தர வேண்டாம் என திமுக மேலிடம் கட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications