“பைரேட்டுகள்” பயம் காட்டிட்டாங்களே.. தமிழ் மீனவர்களை தாக்கும் இலங்கை! ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை நாட்டினரால் தாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், 2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கவலைபடத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதோடு, மீனவர்களிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தாக்குதல் சம்பவங்களால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இது மீனவர்களின் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணர்த்திடும் வகையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின்முன் நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்." என்று அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications