அதிகரிக்கும் கொரோனா.. சென்னை மாநகராட்சி ஆணையருக்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று (03-05-2020), சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்க்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

அன்புடையீர், வணக்கம். தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழலில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மாநகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள இடர்மிகு இந்நேரத்தில் எமக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை இனியாவது சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ma subarmanian asked many questions over coronavirus cases increased in chennai

1. கொரோனா தொற்று தேசிய பேரிடராக மத்திய அரசு மார்ச் 14-ம் தேதி அறிவித்ததை தொடர்ந்து மார்ச் 17-ம் தேதி முதல் தியாகராய நகர் ரெங்கநாதன் தெரு கடைகள் உட்பட திரையரங்குகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் மூடப்பட்டது. மார்ச் 22-ம் தேதி மற்றும் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உள்ளது. இன்று "கொரோனா பாதிப்பின் மையமானது கோயம்பேடு" என்பது தலைப்புச் செய்தி ஆகியுள்ளது. நேற்று இரவு வரை 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

சுமார் 15,000 கூலித் தொழிலாளர்களும் தினந்தோறும் லட்சக்கணக்கானோரும் ஒன்றுகூடும் "கோயம்பேடு சந்தையை" சென்னை மாநகராட்சி கணக்கில் எடுத்து தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

2. கடந்த நான்கு நாட்களாக அரசு நிர்வாகங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் "கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்" என்பதை போல் தானே?

3. சென்னையில் திரு.வி.க. நகர், இராயபுரம் மண்டலங்களில் உள்ள 30 வட்டங்கள் மற்றும் கோயம்பேடு வட்டம் ஆகியவற்றை மிக ஆபத்தான வட்டங்களாக அறிவித்து நாம் கடந்த பேரிடர் காலங்களில் செய்வதை போல, அந்த வட்டங்களுக்கும் மற்ற மண்டலங்களுக்கும் தனித்தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் Nodal officer-களாக நியமிக்காதது ஏன்? காரணம், இந்த வட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, சில மாநிங்களில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. (உதாரணத்திற்கு வார்டு எண் 77-ல் மட்டும் 149 பேர்) அப்படி நியமித்தால் தொற்று பரவுதலை அனைத்து வகையிலும் அதிகாரம்படைத்த அவர்களால் தடுக்க முடியுமே?

4. சென்னையில் மண்டல வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை எனச் பிரிப்பதை, வட்ட வாரியாக செய்தால் Micro Planning மற்றும் நடவடிக்கைக்கு பயன்படுத்த ஏதுவாக இருக்குமே? சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் ஒரு தொற்றாளர் கூட கண்டறியப்படவில்லை என்பது உண்மைதானே?

5. திமுக தலைவர் முக ஸ்டாலின் மேயராக இருந்த போது, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன் மத்திய - மாநில அரசுகளின் சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டதே, அதுபோல குலை நடுங்கும் இந்த கொரோனா பேரிடர் சமயத்தில் சேவைத்துறைகளை ஒருங்கிணைத்து அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளாதது ஏன்?

6. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சென்னையில் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளாளர்கள் வாரியத்தில் பதிவு செய்யாமல் உள்ளார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே? அப்படிப்பட்டவர்கள் பெரும்பகுதியாக வசிக்கின்ற வடசென்னையில் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் சிக்கல் இருப்பதை தாங்கள் உணராதவரா என்ன?

7. அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் முதலான தொண்டு நிறுவனங்களோடு இணைந்து ஒரே நாளில் 155 "மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை" நடத்தி சென்னை மாநகராட்சி முதன்முறையாக 2007-ல் 'லிம்கா' சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததை கருத்தில்கொண்டு, அத்தகைய தொண்டு நிறுவனங்களை இதுபோன்ற கஷ்டமான சமயங்களில் பயன்படுத்திக்கொள்வது சரியாக இருக்குமல்லவா?

8. "மூன்று நாட்களில் கொரோனா பூஜ்யமாகும்"; "இந்த வைரஸ் பணக்காரர்களை மட்டுமே தாக்கும். ஏழைகளை தாக்காது" என்று சொன்ன தமிழக முதல்வரின் ஞான கணிப்பையும் மீறி கோயம்பேட்டில் கொத்தமல்லி விற்றவரும் வாங்கியவருமாக சேர்த்து சென்னையின் பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ தாண்டி போகும் நேரத்தில் சென்னையில் மிக ஆபத்தான வட்டங்களில் இராணுவம் மற்றும் அவர்களின் மருத்துவத் துறையை பயன்படுத்த யோசிக்கலாம் அல்லவா?

9. வரலாறு காணா பேரிடர் நேரத்திலும் அரசின் நிவாரணப் பொருட்களை ஏழை-எளியோருக்கு வழங்கும்போது ஆளும்கட்சியை சேர்ந்த 'வட்டம் - பகுதிகளை' கூட்டுச்சேர்த்துக் கொள்வது நியாயமா?

10. 98 சதவீதம் பேருக்கு எவ்விதமான அறிகுறியும் இல்லாத நிலையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சொன்ன தாங்கள், அத்தகையவர்களை தனி விடுதிகளில் வைத்து கண்காணிப்பதுதானே சரியாக இருக்கும்?

11. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் முதலானோருக்கு தொற்று ஏற்படுவதைப் பார்க்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களில் குறைபாடுகள் இருப்பதை உணரமுடிகிறதா? - இல்லையா?

அன்புகூர்ந்து இவைகளைக் குற்றச்சாட்டுகளாக கருதிடாமல் ஆலோசனைகளாக ஏற்று மாநகர மக்களை காக்க கவனம் செலுத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்" இவ்வாறு மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+