நரபலி அச்சம்.. வளர்ப்பு தாய்க்கு அஞ்சி தமிழகத்தில் தஞ்சமடைந்த ம.பி. மாணவி.. ஹைகோர்ட்டிலும் வழக்கு
நரபலிக்கு பயந்து மத்திய பிரதேச மாநில மாணவி ஒருவர் தமிழகத்தில் தஞ்சம்
சென்னை: வளர்ப்புத் தாயின் நரபலிக்கு அஞ்சி தமிழகத்திற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி தப்பி வந்து தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதுகலை மாணவி ஷாலினி சர்மா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதி. வித்யார்த்தி பரிஷத் எனும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் எனது வளர்ப்பு தாய் சுதா சர்மா.
இவர் மாந்த்ரீகங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். என்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துவிட்டார். ஏற்கெனவே எனது 10 வயது தம்பியையும் மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்க யாருக்குமே தைரியமில்லை. நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை வந்தேன். தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியுள்ளேன்.

ஏபிவிபி அமைப்பு
என்னை என் குடும்பத்தினரும் ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்து சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அவ்வாறு போபாலுக்கு அழைத்து சென்றுவிட்டால் என்னை நரபலி கொடுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என எனக்கு தெரியும். நிறைய பேர் சொல்லியும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.

போலீஸ் பாதுகாப்பு
அதனால்தான் இங்கு வந்தேன். எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் ஷாலினி சர்மா குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நீதிபதி சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் நரபலி கொடுக்கப்படுகிறது. அண்மையில் கடந்த ஆண்டு கேரளாவில் டாக்டர் தம்பதி இரு பெண்களை நரபலி கொடுத்தனர். அவர்களின் உடலை வெட்டி குக்கரில் வைத்து நரமாமிசம் சாப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவு நேரங்களில்
அது போல் ஆரணியில் ஒரு பகுதியில் கதவுகளை மூடி கொண்டு இரவு நேரங்களில் மந்திரவாதிகள் பூஜைகளை நடத்துவதாகவும் அக்கம்பக்கத்து மக்களின் புகாரின் பேரில் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இன்னும் பூஜை முடிய கொஞ்ச நேரம்தான் இருக்கிறது என கூறி கதவை திறக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்தவர்களை கைது செய்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் பேராசிரியர் தம்பதி தனது இரு மகள்களையும் நரபலி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications