வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் 27 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு! ஆட்சியருக்கு கோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசு 99 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள சர்வதேச வள்ளலார் மையத்துக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன எனக் கூறி, அதுதொடர்பான மனுவைத் தாக்கல் செய்தார்.
சர்வதேச மையம் கட்டிக் கொடுத்து சத்திய ஞான சபையை அரசு எடுத்துக் கொள்ள போவதாக மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச மையம் கட்டப்பட்டு, மீண்டும் அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்படும் என விளக்கம் அளித்தார்.
காலி நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அடிக்கல் நாட்டும் பணிகள் துவங்கிய போது, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்பட்டதை அடுத்து, தொல்லியல் துறை குழுவினர் அந்த நிலத்தை ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள், ஜோதி தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வதில் என்ன ஆட்சேபம் உள்ளது? அதன் மூலம் பக்தர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது? என மனுதாரர்கள் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, வள்ளலார் திருவருட்பா பாடல்களில் ஜோதி தரிசனத்துக்காக பெருவெளியை அப்படியே வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். அதனால் வேறு இடத்தில் சர்வதேச மையம் கட்டலாம் எனவும், 100 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோவில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை பாதுகாக்க வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டது. இதுவரை இந்த இடத்தை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவிக்காத நிலையில் எப்படி ஆட்சேபம் தெரிவிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு தலைமை வழக்கறிஞர், கோவில் புராதன சின்னம் தான். கோவிலை அரசு தொடப் போவதில்லை. ஆனால் அந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததா என, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு நியமித்த நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த குழு, இந்த நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என அறிக்கை அளித்துள்ளது என்றார்.
தொல்லியல் துறை காரணமாக உயர் நீதிமன்றத்திலும் கூட மேம்பாட்டு பணிகளை துவங்க முடியவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து, நூறு ஆண்டுகள் பழமையானவை என கண்டறிந்தால் அவற்றை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொல்லியல் துறை அமல்படுத்த வேண்டும் என்றனர்.
வழக்கில் வாதங்கள் நிறைவு பெறாததால் விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்திய ஞான சபை அமைந்துள்ள 71 ஏக்கர் பரப்பளவு இடம் வழிபாட்டு இடம் என்பதால் அங்கு எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், "குற்றச்சாட்டுகளாக சொல்லாதீர்கள். அதில் உள்நோக்கம் உள்ளது. அடிப்படை வசதிகளை செய்து தருவது மாநில அரசின் பொறுப்பு. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட குறைந்தபட்ச சுகாதார வசதிகளை செய்து தர வேண்டியது மாநில அரசின் கடமை" என்று குறிப்பிட்டனர்.
மேலும், நாளை ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் அரசின் மீது தான் குறை சொல்வார்கள் என்றும் சுட்டிக் காட்டினா். அதேநேரம், கோயிலுக்கு பக்தர்கள் 106 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ள நிலையில், அரசுத் தரப்பில் 71 ஏக்கர் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, இந்து அறநிலையத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், கடந்த 1938ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை இந்தக் கோயிலை கட்டுப்பாட்டில் எடுத்தபோது 71 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது என்று தெரிவித்தார். மேலும், 33.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் இருந்து மீட்க வேண்டும் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் தூண்டுதலினால் தான் கட்டுமானங்களுக்கு எதிராக இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள சத்திய ஞான சபைக்குச் சொந்தமாக 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒரு மாதத்தில் அமைத்து அடையாளம் காண வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், சத்திய ஞான சபை மீது அக்கறை உள்ளவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த பட்டியலை தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications