எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க பேரன் எதிர்ப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை மறைந்த பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தனது மனதை மயக்கும் குரலால் இந்தியா முழுமைக்கும் ரசிகர்களை கட்டி போட்டவர் பிரபல பின்னணி பாடகியான எம்.எஸ்.சுப்புலட்சுமி. 2004ஆம் ஆண்டில் அவரது மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி பிரபல ஆங்கில நாளிதழ் இணைந்து அவரது நினைவை போற்றும் வகையில் 2005 ஆம் ஆண்டு முதல் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை வழங்கி வருகிறது.

இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் நடைபெறும் 98 வது ஆண்டு விழாவில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது பாட்டிக்கு எதிராக இழிவான, மோசமான, அவதூறான கருத்துக்களை பேசி வந்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்குவது தங்கள் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பேரன் சீனிவாசன் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதத்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.தனபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்புலட்சுமியின் பேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தனக்கு நினைவிடம், தனது அறக்கட்டளை அமைக்கக் கூடாது என சுப்புலட்சுமி உயில் எழுதி வைத்துள்ள நிலையில் அவரது பெயரில் விருது வழங்கக் கூடாது என தெரிவித்தனர்.
மேலும், சுப்புலட்சுமி குறித்து டி.எம்.கிருஷ்ணா மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த பத்தாண்டுகளாக எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் விருது வழங்கக் கூடாது என தற்போது மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், சொத்து உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே உயில் எழுதி வைத்தது பொருந்தும் எனவும் விருதுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்தனர். இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications