பொள்ளாச்சி கூட்டுப் பலாத்கார வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட தடை.. சென்னை ஐகோர்ட் அதிரடி
கோவை: பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவங்கள் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் குறித்த தகவல்களை வெளியிடச் சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியான.
இதற்கிடையே பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளங்களை மறைக்காமல், அப்படியே வெளிப்படுத்தியதாக ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி சிபிஐ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வாரம் இரு முறை வெளியாகும் தனியார் பத்திரிக்கை ஒன்று பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைக்காமல் பொதுவெளியில் அம்பலப்படுத்தியதாகவும் அதன் பிரதிகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த செய்தி பத்திரிகையில் வெளியாகி மக்களைச் சென்று விட்டதால், பிரதிகளைத் திரும்பப் பெற்று பலனில்லை என்று தெரிவித்த நீதிபதி, அந்த தனியார் பத்திரிகையை இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் குறித்த செய்திகளை வெளியிடத் தடை விதித்த சென்னை ஐகோர்ட், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரை பத்திரிகை அல்லது காட்சி ஊடகங்கள் முகம் மற்றும் அடையாளங்களை மறைத்துக் கூட செய்தி வெளியிடக் கூடாது என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மீறும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications