குடியிருப்பு பகுதியில் நாம சங்கீர்த்தனம் நடத்த கூடாது.. கலெக்டர் அனுமதி தேவை! சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் நாம சங்கீர்த்தனம் என்ற பெயரில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சிலருக்கு இனிமையான இசையாக ஒலிப்பது மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்றம், கலெக்டர் அனுமதி வழங்காத வரை, அந்த இடத்தைப் பிரார்த்தனை மண்டபமாகப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ராதா நகரில் உள்ள கிருஷ்ணமாச்சாரி தெருவைச் சேர்ந்த பிரகாஷ் ராமச்சந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். தனது அண்டை வீட்டில் வசிக்கும் சுப்ரமணியன் என்பவர் அவரது வீட்டில் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவைனிட்டி (GOD) என்ற ஆன்மீக அமைப்பின் அலுவலகத்தைத் திறந்துள்ளதாகத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நாம சங்கீர்த்தனம் தொடர்பாக வழக்கு
அந்த இடத்தில் நாம சங்கீர்த்தனம் செய்யப்படுவதால், மற்ற குடியிருப்பாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக மனுதாரர் புகார் அளித்தார். இதை எதிர்த்து பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மற்ற அனைத்து அண்டை வீட்டாரின் சம்மதத்துடன் தான் நாம சங்கீர்த்தனம் செய்யப்படுகிறது என்றும் அரசியலமைப்பின் 25வது பிரிவின் (மத சுதந்திரம்) கீழ் தங்களது மத உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். கடவுளின் நாமத்தை உச்சரிப்பது மன அமைதிக்கு உதவும், அனைத்துத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் வாதிட்டனர்.
நீதிபதி கருத்து
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. எந்தவொரு பிரார்த்தனையும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்று நீதிபதி கூறினார். மேலும், ஒரு விவகாரத்தில் அனைத்துக் குடியிருப்பாளர்களும் தொந்தரவு குறித்து புகார் அளிக்க நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் மேலும் கூறுகையில், "சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.எந்த மதக் குழுவும் கலெக்டரின் அனுமதி இல்லாமல் இதுபோன்ற இடங்களில் குழுவாகப் பிரார்த்தனை செய்யக்கூடாது. அமைதியே சிறந்த பிரார்த்தனை, மௌனமே மிகச் சிறந்த பிரார்த்தனை. இந்த உண்மையை மக்கள் உணரும்போது, சத்தமாகவும், இரைச்சலாகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து மற்றவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்" என்று கூறினார்.
கலெக்டர் உத்தரவு தேவை
முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியிருப்புகளில் கிறிஸ்தவக் குழு பிரார்த்தனைகளுக்கும் கலெக்டர் உத்தரவு நிச்சயம் தேவை என்று ஒரு உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "அதே உத்தரவு இங்கும் பொருந்தும். கடவுளின் பெயரில் மட்டும் மாற்றம் இருக்கிறதே தவிர, மற்ற அனைத்தும் இரண்டு வழக்குகளிலும் ஒன்றுதான். கலெக்டரின் அனுமதி இல்லாமல் எப்படி நாம சங்கீர்த்தனம் செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
நாம சங்கீர்த்தனம் நடத்தக்கூடாது
அதற்குத் தங்கள் தரப்பினர் ஏற்கனவே செங்கல்பட்டு கலெக்டரிடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தனர். இதைக் குறித்துக் கொண்ட நீதிபதி, கலெக்டர் அனுமதி வழங்கும் வரை குடியிருப்புப் பகுதியில் நாம சங்கீர்த்தனம் நடத்தக்கூடாது என்றும் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படுவதை சிட்லப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications