வைணவ பிராமணர் நிபந்தனை நீக்கம்.. வைணவம் பெருமாளை வழிபடும் ஒரு பிரிவே தவிர சாதி இல்லை.. ஐகோர்ட்
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எல்.ரவி என்பவர் காஞ்சீபுரம் தேவராஜசுவாமி கோவிலில் பிரசாத கடை ஏலம் எடுக்க விரும்பி உள்ளார். ஆனால் வைணவ பிராமணர் என்ற நிபந்தனை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 'வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர, அது தனிப்பட்ட ஒரு சாதி இல்லை. அதனால், பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை வழக்கு தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், "நான் காஞ்சீபுரம் தேவராஜசுவாமி கோவிலின் தீவிர பக்தன். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏல விதிகளில், பிரசாத கடை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் வைணவ பிராமணராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த ஜூலை 4-ந்தேதி பிரசாத கடைக்கு ஏல அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில், ஏற்கனவே சேர்க்கப்பட்ட நிபந்தனையான, வைணவ பிராமணர் என்ற நிபந்தனை காரணம் எதுவும் கூறாமல் நீக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், "ஒரு பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாத விற்பனையை அனுமதிக்க இயலாது. வைணவ கோவில்களில் பிரசாத கடை நடத்தி 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இதுபோன்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது'' என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர, அது தனிப்பட்ட ஒரு சாதி இல்லை". அதனால், பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' என்ற உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications