துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கோரிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்! ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்கக் கோரி விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தாக்கல் செய்த மனுவுக்கு இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த போது கிரானைட் முறைகேட்டை விசாரிக்க என்னை ஆணையராக உயர்நீதிமன்றம் நியமித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் சட்டவிரோத கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தேன்.

இந்த அறிக்கையின் அடிப்படையில், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு 2023 ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கிரானைட் முறைகேடு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள என்னால் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலவில்லை.
அச்சுறுத்தல்கள் எனக்கு தொடர்வதால் பாதுகாப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என அக்டோபர் 7ஆம் தேதி அளித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜெகதீஷ், "சகாயம் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு இரு வாரங்களுக்குள் பதிலளிக்க" உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற தான், தனது 23 ஆண்டு காலத்தில் 22 முறை பணிமாறுதல் பெற்றுள்ளதாகவும் சகாயம் ஐஏஎஸ், தெரிவித்துள்ளார். மதுரையில் ஆட்சியராக இருந்த போது 2012 ஆம் ஆண்டு மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை தடுத்தார். இதனால் அந்த ஆண்டு அரசுக்கு ரூ 16 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதையும் வெளிக் கொண்டு வந்தார்.












Click it and Unblock the Notifications