4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், தற்போது பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு கல்லூரிகளில் பல ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களது பணியை வரன்முறை செய்து உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு, 1,146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
ஆனால் பின்னர் 2022-ம் ஆண்டு அந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து, காலியாக இருந்த 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதை எதிர்த்து கவுரவ விரிவுரையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, 2022-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, பழைய அரசாணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக உயர்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்தன.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, "பணி வரன்முறை மற்றும் போட்டித் தேர்வு இரண்டும் வேறுபட்டவை. கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறையை உரிமையாக கோர முடியாது" என்று தெளிவுபடுத்தினர்.
நீதிபதி உத்தரவு
மேலும், மொத்தம் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஏற்கனவே 42,064 பேர் விண்ணப்பித்துள்ளதால், வெளிப்படையான போட்டித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதேநேரத்தில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சம் 15 மதிப்பெண்கள் வரை 'வெயிட்டேஜ்' வழங்கலாம் என்றும், வயது வரம்பில் தளர்வு அளிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மிக முக்கியமாக, தேர்வு நடைமுறைகள் அனைத்தும் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், புதிய நியமன உத்தரவுகள் வெளியாகும் வரை தற்போது பணியில் உள்ள கவுரவ உதவி பேராசிரியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இறுதி உத்தரவு வெளிவரும் வரை தற்போது பணியாற்றும் கவுரவப் பேராசிரியர்களை நீக்கக் கூடாது. இது அரசு கல்லூரிகளில் தகுதியானவர்களை நியமிக்க உதவும். உயர் கல்வி அமைப்பில் சீரான தேர்வு நியமனங்களை உறுதி செய்கிறது.












Click it and Unblock the Notifications