ஆர்எஸ்எஸ் பேரணி.. அனுமதியில் தாமதம் ஏன்? காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: விஜயதசமியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஊர்வலத்திற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அனுமதி கோரியிருந்தது. காவல்துறை அனுமதியளிக்க தாமதித்த நிலையில், இது குறித்து உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தல், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகளின் பேரணிகளின்போது கலவரங்கள் நடப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுபோன்ற மத அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதி கோரியிருந்தது. ஆனால் இதற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை தாமதித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி மறுப்பது தி.மு.க. அரசின் பாசிச முகத்தை காட்டுகிறது. 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று 'ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்' (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடப்பது வழக்கம்.
தமிழகத்தில் 1940களில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த திமுக அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே, சர்வாதிகார ஆட்சியைப் போல பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்துள்ளது.
இதுவரை எந்த பதிலையும் தராமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. அதுபோல இந்த ஆண்டும் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு என்பது சீருடை அணிந்து ராணுவம் போல கட்டுப்பாட்டுடன் நடக்கும் அணிவகுப்பு. இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் அனைத்தும் மிகவும் அமைதியுடன் நடந்திருக்கிறது. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடக்கும்போது, தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது திமுக அரசின் பாசிச தன்மையையே காட்டுகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அணிவகுப்பு, பேரணி நடத்த நமது அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் ஒரு பக்கம் முழங்கிக் கொண்டே, மறு பக்கம், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கிறது பாசிச திமுக அரசு. இது கடும் கண்டனத்திற்குரியது" என்று கூறியிருந்தார்.
அதேநேரம், அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் நீதிமன்றத்தை நாடியிருந்தது. ஆர்எஸ்எஸ் மனு இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலித்து வருவதாகவும், 29ம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்றார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணி வகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஒவ்வொரு வருடமும் ஒரே வழித்தடத்தில் தான் அணி வகுப்பு நடைபெறுகிறது, அதற்கான விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் என கேள்வி எழுப்பிய நீதிபதி விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதற்கு முன்பாக, அனுமதிக்கோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications