கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: தயாரிப்பாளருக்கு வழங்க வேண்டிய 4 கோடியே 25 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா தயாரிப்பாளர் எஸ்.எல்ரெட் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ரமேஷ் பாபு மூலம் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில், "நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து எஸ்.எல்ரெட் குமார் ஆகிய நான் ஒரு திரைப்படம் தயாரிக்க இருந்தேன். அந்த திரைப்படத்தை இயக்குவதற்காக பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை சந்தித்து 4 கோடியே 25 லட்சம் ரூபாயை வழங்கி கடந்த 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை. எனவே நான் கொடுத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்ட போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பணத்தை கொடுக்கவில்லை. மேலும், திரைப்படத்தை இயக்குவதாகவும் அவர் உத்தரவாதம் வழங்கவில்லை. எனவே நான் வழங்கிய தொகையை திருப்பி தருமாறு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 4 கோடி 25 லட்சம் ரூபாயை மனுதாரர் எல்ரெட் குமாருக்கு வழங்குமாறு கடந்த 2022 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார். தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிபதிகள் இன்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நீதிபதி உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதனால், பட தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கு 4.25 கோடியை 12% வட்டியுடன் திருப்பிச் செலுத்தவும், அத்துடன் நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கறிஞர் கட்டணம் உள்ளிட்ட ரூ.12 லட்சத்தை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications