கொடிக்கம்பத்தை அகற்றிய போலீஸாருக்கு பாஜக நன்றி சொல்ல வேண்டும்! ஏன் தெரியுமா? நீதிபதி சொன்ன பாயிண்ட்!
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக்கம்பத்தை அகற்றிய கானத்தூர் காவல்துறையினருக்கு பாஜகவினர் தான் நன்றி சொல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே 55அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், கொடிக்கம்பத்தை அமைத்தே தீருவோம் என அடம்பிடித்த அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் ஜே.சி.பி.வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில், 55 அடி உயரத்திற்கு கொடிக்கம்பம் அமைக்க வேண்டியதன் நோக்கம் என்ன என வியப்போடு வினவினார். அதுமட்டுமல்ல 10 அடியில் கொடிக்கம்பம் இருந்தாலே அது எல்லோருக்கும் தெரியும் என்றும் 55 அடி உயரத்துக்கு கொடிக்கம்பம் அமைத்தால் அதை யாராலும் அண்ணாந்து பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.
மேலும், 55 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் அமைப்பதற்கு 5 அடியிலாவது அடித்தளம் வலிமையாக அமைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அவ்வாறு அடித்தளம் அமைக்கும்பட்சத்தில் அது பூமிக்குள் செல்லும் புதைவட மின் கம்பிகளையும், கழிவுநீர் குழாய்களையும் சேதப்படுத்தியிருக்கும் எனத் தெரிவித்தார். காவல்துறையினர் மட்டும் கொடிக்கம்பத்தை அனுமதித்திருந்தால் அது அண்ணாமலை வீட்டு கழிவுநீர் குழாயை தான் சேதப்படுத்தி அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றவர் இதற்காக கானத்தூர் காவல்துறையினருக்கு பாஜகவினர் நன்றி சொல்ல வேண்டும் எனக் கூறினார்.
மேலும், அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் வாதத்தை ஏற்று, சேதப்படுத்திய ஜேசிபி வாகனத்திற்கு 6 பேரும் தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.12,000 அதன் உரிமையாளரிடம் வழங்க வேண்டும் என்றும் என்றும் ஜாமின் வழங்கப்படும் இரண்டு வாரகாலமும் தினமும் விசாரணை அதிகாரி முன் அமர் பிரசாத் ரெட்டி உட்பட 6 பேரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications