Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாட நேரக் கட்டுப்பாடு.. ஆன்லைன் ரம்மிக்கு ஆதார்! கோர்ட்டுக்கு போன நிறுவனங்கள்.. வெளியான உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கி, நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிர்த்த வழக்குகளில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகளை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.

High Court Online rummy tamilnadu govt

இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிர்ஷ்டத்துக்கான ஆன் லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மி: அதேசமயம், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

ஆதார் கட்டாயம்: இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும் போது, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும், எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும். விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு பணம் வைத்து மட்டுமே ஆட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.

நேரக்கட்டுப்பாடு: மேலும், ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் அந்த விதிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிட்டெட், ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் நலச்சங்கம் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு: அந்த மனுக்களில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள வர்த்தகம் செய்யும் உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த விதிகளை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்பவர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதியில் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், எந்த காரணமும் இல்லாமல், அறிவியல்பூர்வமான புள்ளி விவரங்கள் சேகரிக்காமல், சம்மந்தப்பட்டவர்களை கலந்து ஆலோசிக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிகள் மத்திய அரசின் சட்டத்திற்கு விரோதமாக உள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதம்: இந்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் விளையாடுவோர் நலச்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. கிளப்களில் ரம்மி விளையாட எந்த நேரக்கட்டுப்பாடும் இல்லாத நிலையில், ஆன்லைனில் விளையாட தடை விதிப்பது பாரபட்சமானது. உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆதாரை அரசின் நலத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டாயப்படுத்த வேண்டுமே தவிர மற்றவற்றுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு விரோதமாக ஆன்லைன் விளையாட ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வாதிட்டனர்.

தமிழக அரசு: ஆன்லைன் விளையாட்டை விளையாட நேரக்கட்டுப்பாடு விதிக்க அரசுக்கு அதிகாரமில்லை. ஆதார் விவரங்களை வெளிப்படுத்த சொல்வது தனிநபர் அந்தரங்க உரிமையை பாதிக்கும் என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டனர்.

ஆன்லைன் ரம்மி சட்டம்: தமிழக அரசுத்தரப்பில், தலைமை வழக்கறிஞர், மக்கள் தங்கள் சொத்துக்களை இழந்ததால் தான் இந்த ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததன் மூலம் மாநில அரசுக்கு இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்பது தெளிவாகிறது. வயது, விளையாடும் நேரம் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தான் அதிகளவில் இளைஞர்கள் விளையாடுகிறார்கள் என நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.

நீதிபதிகள் உத்தரவு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் தெரிவித்த நீதிபதிகள், மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+