அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு- இபிஎஸ் மனுவுக்கு மனோஜ் பாண்டியன் பதில் தர உத்தரவு!
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் கடந்த ஆண்டு ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம் என கடந்த மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அணி மனோஜ் பாண்டியன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அம்மனுவில், பொதுக்குழு தீர்மானங்கள் இயற்கைக்கு எதிரானது; அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களை எதிர்த்து பிப்ரவரி 23-ந் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் வாதிட்டார். மேலும், அதிமுக விதிகள்படி உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை. உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைதான் எடுக்க முடியும். ஆனால் ஜூலை 11 பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் போட்டு ஓபிஎஸ் அணியினரை நீக்கி உள்ளனர். ஆகையால் அதிமுக உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கருத்தை கேட்காமல் தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனோஜ்பாண்டியன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த பதில்மனுவில், கட்சியை தற்போது இடைக்கால பொதுச்செயலாளரே பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இந்த வழக்கில் பிரதிவாதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது கட்சியின் உறுப்பினரே அல்ல என்றும் பதில்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன் ஜூன் 14ம் தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்படி, தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும் பதிவு செய்து கொண்டதாக பதில் மனுவில் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் சட்ட ஆணையம் தனக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதே அடிப்படையில் ஜி 20 மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்குழுவும், கட்சி உறுப்பினர்களும் ஜெயலலிதாவை தங்கள் இதயத்தில் தெய்வமாக, அன்னையாக நிறுத்தியுள்ளனர் என்றும், கலைக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதும், மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். வழக்கமாக, தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் இந்நீதிமன்றம் தலையிடும்படி மனுதாரர் கோர முடியாது எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பெரும்பான்மையினரின் முடிவை சிறுபான்மையினர் முடக்க முடியாது எனவும், கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை தாக்கிய மனுதாரருக்கு பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க அவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என கூற முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது என்றும், பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது இபிஎஸ் தரப்பு அளித்த பதிலுக்கு மீண்டும் மனோஜ் பாண்டியன் தரப்பு பதி தர உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications