போலீஸ் ஸ்டேஷனில் தூக்கு.. CCTV லீக்கானது எப்படி? போலீஸிடம் கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பிய ஹைகோர்ட்!
சென்னை: செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளின் 2 நகல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகள் வெளியானது எப்படி? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேனி அருகே லாரி தீப்பற்றி எரிந்த வழக்கு தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பணியில் இருந்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த ஓட்டுனர் பாலகிருஷ்ணனின் மனைவி சுதா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், " விசாரணைக்கான சென்ற எனது கணவர், பாலகிருஷ்ணன் செக்கானூரனி காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவரதுஉடற்கூராய்வு அறிக்கையில், காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனது கணவர் உயிரிழப்பிற்கு முன்பாக அவர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்பதை நிரூபிக்க இவை போதுமானவையாக உள்ளன. எனவே செக்கானூரணி காவல் நிலைய கழிவறையில் இருந்து கணவரது உடல் அகற்றப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை பாதுகாத்து வைக்கவும், செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை பாதுகாத்து நகல்களை வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், " உடற்கூராய்வு அறிக்கையில், உடலில் காயங்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. சில காட்சிகள் மட்டும் ஊடகத்தில் வெளியாகின என குறிப்பிட்டு, அது தொடர்பான காட்சிகள் நீதிபதி முன்பாக சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும், "அவரது சட்டையைக் கொண்டு அவர் தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. உடற்கூராய்வுக்கு முன்பாக ஸ்கேன், புகைப்படம் எடுக்கப்பட்டது. எந்த சம்மனும் வழங்கப்படாமல் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். லாரி தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக அவர் தாமாகவே சென்று புகார் கொடுத்துள்ளார்" என தெரிவிக்கப்பட்டது
வழக்கு ஆவணத்தை பார்த்த நீதிபதி, " சிசிடிவி காட்சியில் இருக்கும் நேரத்தோடு ஒப்பிடுகையில், வழக்கு பதிந்த ஆவணத்தில் உள்ள டிஜிட்டல் கையெழுத்து 14ஆம் தேதியைக் காட்டுகிறது. அவ்வாறெனில்
வழக்கு அவரது இறப்புக்குப் பின்பே சுமார் 4 மணி நேரம் கழித்து பதியப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
அரசுத்தரப்பில், "நவம்பர் 3ஆம் தேதி தீ விபத்து நடந்தது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். பாலகிருஷ்ணன் எந்த புகாரையும் கொடுக்கவில்லை. டெலிவரி நிறுவனம் புகார் அளித்தது. கண்டெய்னர் 162 பைகளில் ஏலக்காய் இருந்தன. 67 பைகளை காணவில்லை" என தெரிவிக்கப்பட்டது
அதற்கு நீதிபதி முறையாக விசாரித்து இருந்தால் அவற்றை நீங்களே கண்டுபிடித்து இருக்கலாமே? எனக் கேட்டார்
அப்போது, வாலாந்தூர், செக்கானூரணி காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் 2ஆம் தேதி முதல் சேகரிக்கப்பட்டு சிபிசிஐடி-யிடம் வழங்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல் நிலைய 13,14 ஆம் தேதிக்கான சிசிடிவி காட்சிகள் DSPயால் பாதுகாக்கப்பட்டுள்ளன" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதி,சிசிடிவி காட்சிகளை மனதாரருக்கு கொடுப்பதில் என்ன சிக்கல் என கேட்ட நிலையில்,
அரசுத் தரப்பில்"விசாரணை சிபிசிஐடி வசம் இருப்பதால், சிசிடிவி காட்சிகளை கொடுத்தால் விசாரணை பாதிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "அவ்வாறெனில் குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டும் ஊடகங்களில் வெளியானது எப்படி? கசிய விட்ட அதிகாரி யார்? அனுமதி இன்றி காட்சிகள் வழியாக வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.
தொடர்ந்து, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகர் மற்றும் தாலுகா காவல்நிலையத்தின் 13,14ஆம் தேதி
சிசிடிவி காட்சிகளின் 2 நகல்களை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்கால உத்தரவிட்டு, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.



Click it and Unblock the Notifications
