Madurai Mayor: இந்திராணி ராஜினாமா.. மதுரையின் புதிய மேயர் யார்? முட்டிமோதும் திமுக நிர்வாகிகள்!
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மதுரையின் அடுத்த மேயர் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. புதிய மேயரை தேர்வு செய்யும் மாமன்றக் கூட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ள நிலையில், மேயர் பதவிக்கு வாசுகி சசிகுமார் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை இந்திராணி மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் வழங்கி உள்ளார். இதனால் மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் சொத்து முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார்.

இதன்பின் மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களையும் பதவி விலக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சியின் சொத்து வரி ஊழல் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாகியது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான பொன்வசந்த் தனது மனைவியை மேயராக கொண்டு வந்தார்.
மதுரை மேயர் யார் என்பதை முடிவு செய்வதில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் மூர்த்தி இடையில் மிகப்பெரிய மோதல் இருந்து வந்தது. ஆனால் அப்போது திமுக தலைமையிடம் இருந்த நல்லப் பெயர் காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கைகள் ஓங்கியது. ஆனால் நாளடைவில் இந்திராணி மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்தன.
ஒரு கட்டத்தில் மேயரின் கணவர் பொன்வசந்த் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக அரசியல் செய்ய தொடங்கினர். இதனால் உடனடியாக திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டதோடு, அடுத்த சில வாரங்களில் கைது செய்யப்பட்டார். அதேபோல் மாநகராட்சி ஊழல் விவகாரத்தில் அமைச்சர் கேஎன் நேரு, மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னதாக விசாரணை நடத்தினர்.
அதன்பின்னரே மண்டலத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பின் இந்திராணியை ராஜினாமா செய்ய திமுக தலைமை சிறிது காலம் தாழ்த்தி வந்தது. ஏனென்றால் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அது மதுரை மாவட்டத்தில் ஏதேனும் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற குழப்பத்தில் இருந்தது.
இன்னொரு பக்கம் அமைச்சர் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருவரும் தங்களின் ஆதரவாளர்களை மேயராக கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மேயர் இந்திராணி, ஆணையர் சித்ரா ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து திமுக தலைமை விசாரித்தது.
இதையடுத்து அமைச்சர் கேஎன் நேரு முன்னிலையில் இந்திராணியிடம் ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கியுள்ளனர். ஏற்கனவே நெல்லை, கோவையில் கோஷ்டி பூசல் காரணமாக மேயர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் ஊழல் புகார் காரணமாக பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அடுத்த மேயர் தேர்வு நாளை மறுநாள் (அக்டோபர் 17) நடக்கவுள்ளது.
இதற்காக அறிவிப்பை துணை மேயர் நாகராஜன் ஏற்கனவே கொடுத்திருக்கிறார். அக்டோபர் 17ல் நடக்கும் மாமன்றக் கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மதுரையின் புதிய மேயராக வாசுகி சசிகுமார் கொண்டு வரப்படலாம் என்று பேச்சுகள் எழுந்துள்ளன.
அனைத்து மண்டலத் தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய அறிவுறுத்திய போதும், மதுரை கிழக்கு மண்டல தலைவரான வாசுகி சசிகுமாரை மட்டும் ராஜினாமா செய்ய வேண்டுமாம் என்று திமுக தலைமை அறிவுறுத்தியது. இவர் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர் என்பதால், இம்முறை வாசுகி சசிகுமாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications