Madurai Petrol Bomb Attack: மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொலை.. 9 பேரும் குற்றவாளிகள்! கரூர் கோர்ட் தீர்ப்பு
மதுரை: கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை அவனியாபுரம் அருகே வேனில் சென்ற 12 பேர் மீது பெட்ரோல் குண்டு வீசி 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளை அளிக்கப்படுகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள் 15-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றனர். பின்னர் பூஜை முடிந்து மீண்டும் மதுரை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்து மதுரை மாவட்டம் வலையங்குளம் ரிங் ரோடு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று வேன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் வேனில் பயணம் செய்த வெற்றிவேல், தேசிங்கு ராஜா, ஜெயபாண்டியன், சுந்தரபாண்டியன், ரஞ்சித் குமார் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் ராமர் பாண்டி, மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்து கருப்பன், முத்து விஜய், மோகன், விக்கி என்கிற விக்னேஸ்வரன், சந்தோஷ் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு, மதுரையில் இருந்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை 14 ஆண்டுகளாக நடைபெற்றது.
இதற்கிடையே, வழக்கு விசாரணையின் போதே ராமர் பாண்டி மற்றும் முத்து விஜய் ஆகியோர் உயிரிழந்தனர். கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் குற்றவாளி என அறிவித்தார். தொடர்ந்து 9 பேருக்கான தண்டனை விவரங்கள் நாளை (25 ஆம் தேதி) அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 9 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications