தனிஷ்க் நகை கொள்ளை.. நிஷாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்த.. போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நாளுக்கு நாள் புதுப்புது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வழக்கில் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் முக்கியக் குற்றவாளி நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 25 வயதான நிஷாந்தைப் பற்றிய புதிய தகவல் இப்போது பேசுபொருளாகியுள்ளது.
முகத்தை மறைத்து வைத்திருந்த நிஷாந்த்
சாதாரணமாக யூடியூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் தங்கள் முகத்தைக் காட்டி, தாங்கள் செல்லும் இடங்களைப் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவிடுவதுதான் வழக்கம். ஆனால், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான நிஷாந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தவர்களுக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

பைக் ரைடிங் மற்றும் டிராவல் டியோக்களைப் பதிவிடும் ஒரு தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிஷாந்த் நடத்தி வந்துள்ளார். பைக்கிலேயே இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து, அந்தப் பயண அனுபவங்களை அவர் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்தப் பதிவுகள் எதிலுமே அவர் தனது முகத்தை ஒருமுறை கூட வெளிப்படையாகக் காட்டியதில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஹெல்மெட் அணிந்தபடியோ அல்லது முகம் தெரியாத கோணங்களிலோ மட்டுமே புகைப்படங்களைப் பதிவிட்டு, தனது அடையாளத்தை அவர் ரகசியமாகவே வைத்திருந்துள்ளார். வீடியோ எடிட்டராகப் பணியாற்றியபடியே, பல மாநிலங்களுக்குப் பயணம் செய்த அனுபவம் அவருக்கு இருந்துள்ளது.
போலீசுக்கு சவாலாகும் பயண அனுபவம்
இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பைக்கில் சுற்றிய அனுபவம் நிஷாந்துக்கு இருப்பதால், போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பதற்கு அவர் அந்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே கொள்ளையடிப்பதற்கு முன்பாக, நவம்பர் 5-ம் தேதி உட்பட மூன்று முறை நகைக்கடைக்கு வாடிக்கையாளர் போல வந்து நோட்டமிட்ட போதும், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உடைகளை அணிந்து, ஒரே தொப்பி மற்றும் கையில் கட்டுப் போட்டபடி தனது அடையாளத்தை மறைத்துள்ளார்.
கொள்ளை நடந்த இரவிலும் முகமூடி அணிந்து வந்து, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் நகைகளை அள்ளிச் சென்றுள்ளார். கடைசியாகத் திருப்பூரில் முன்பின் தெரியாத ஒரு நபரின் செல்போனில் இருந்து தனது காதலி மீனாட்சிக்குப் போன் செய்து பேசிய பிறகு, தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு நிஷாந்த் தலைமறைவாகியுள்ளார்.
9 தனிப்படைகள் தீவிர வேட்டை
தற்போது சேலம், கோயம்புத்தூர், கேரளா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் 9 தனிப்படை போலீசார் நிஷாந்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மீனாட்சி கொடுத்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பல மாநிலங்களுக்குப் பயணம் செய்த அனுபவம் கொண்ட நிஷாந்த், மீதமுள்ள சுமார் 5 கிலோ நகைகளுடன் வெளிமாநிலங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் முகத்தைக் காட்டாமல் வலம் வந்த நிஷாந்த், விரைவில் போலீசாரின் பிடியில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
